மலேசியாவில் 41,018 சட்டவிரோத குடியேறிகள் கைது!

புதன் நவம்பர் 14, 2018

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியும் பணியாற்றியும் வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,018 பேரை அந்நாட்டின் குடிவரவுத்துறை சிறைப்படுத்தியுள்ளது. 

கடந்த ஜனவரி 2018 முதல் இன்றைய தேதி வரையிலான 10 மாத காலத்தில் நடந்த 12,659 தேடுதல் வேட்டைகளில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியா எங்கும் 165,490 இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

இதில், 13,614 இந்தோனேசியர்கள், 8,748 வங்கதேசிகள், 4,068 மியான்மர் நாட்டினர், பிலிப்பைன்சை சேர்ந்த 3,549 பேர், தாய்லாந்தின் 2,791 பேர், மற்றும் இன்னும் பிற நாடுகளை சேர்ந்த 8,248 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது நாடுகடத்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான-கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள்/வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவிதஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர். அந்த குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்கள் நிகழ்வதும் இச்சிக்கலின் அங்கமாக பார்க்கலாம். 

சமீபத்தில், மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற திருநெல்வேலி சேர்ந்த 48 தமிழக தொழிலாளர்கள் மோசமான வேலைச்சூழலில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்ட பல இந்திய தொழிலாளர்கள் மலேசியாவில் சிக்கிக்கொள்ளும் அவலநிலை இன்றும் நீடித்து வருகின்றது.