மலேசியா: படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 18 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

சனி ஜூலை 07, 2018

இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு 44 இந்தோனேசிய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், 18 தொழிலாளர்கள் காணாமல் போகியுள்ளனர்.  மற்ற 26 பேர்களில் 25 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர், ஒரு பெண் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விபத்து கடந்த திங்கள் கிழமை(ஜூலை 02) நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இப்படகில் வந்த 44 பேரும் சட்டவிரோதமாக மலேசியாவுக்கு வர முயன்றவர்கள் என மலேசிய கடலோர அமலாக்க பிரிவு குறிப்பிட்டிருகின்றது. இந்தோனேசியாவின் பட்டாம்(Batam) பகுதியில் இருந்து தொடங்கிய அப்படகு மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோஹார்(Johor) அருகே மூழ்கியுள்ளது. 

இரண்டு பேர் நீந்தி வருவதை கண்ட கரையோர மக்கள் மலேசியா கடலோர படைக்கு தகவல் அளித்தை அடுத்து, மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் கடல் பகுதியில் தேடிட அந்நாட்டு அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளதாக மலேசியா கடலோர அமலாக்க பிரிவின் அதிகாரி அபூ பக்கர் இட்ரிஸ் தெரிவித்துள்ளார். 

“படகில் அதிகப்பேர் ஏற்றப்பட்டதாலும் மோசமான வானிலை காரணமாகவும் அப்படகு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் சுமார் 150 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்” என கடலோர காவல்படையின் மூத்த அதிகாரி சனிபா யூசப் தெரிவித்திருக்கிறார்.