மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது!

திங்கள் நவம்பர் 23, 2015

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மதுரவாயில் அருகே உள்ள மன்னர் சேரமான் பெருமாள் (எம்.எஸ்.பி) நகர் பகுதிகளில் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களுக்கு பாய், போர்வை , தின்பண்டங்கள் முதலான பொருட்கள் வழங்கப்பட்டது.

தமுக தலைவர் அதியமான் மற்றும் கட்சியினர், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராச்குமார் பழனிசாமி மற்றும் தமிழ் உணர்வாளர்களும் இணைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். எவ்வளவு கொடுத்தாலும் இங்கு  தற்போது பற்றாக்குறை தான் நிலவுகிறது. கூவம் ஆற்றின் கரையோரம் இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கடுமையான கொசுக்கடிக்கு ஆளாகி உள்ளனர். நோய் தொற்றும் அபாயமும் உள்ளது.

அரசு இம்மக்களுக்கு முழுமையான புனர்வாழ்வு அளிக்கும் வரை இவர்களின் சோகம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். 400 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தமிழர் முன்னேற்றக் கழகம் தங்களால் முடிந்த உதவிகளை  செய்துள்ளது.  மேலும் உதவிகளுக்கு மக்கள் நல்ல உள்ளங்களை நாடியே நிற்கின்றனர். வாய்ப்புள்ள கட்சிகள், அமைப்புகள் , தனி நபர்கள் தங்களால் முடிந்த உதவியை இப்பகுதி மக்களுக்கு செய்ய முன்வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அரசும் இந்தப்பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுக்கிறது.