மஸ்தான் நிமயனத்திற்கு தமிழர் சமஉரிமை இயக்கம் கண்டனம்

Tuesday June 12, 2018

இந்துமத விவகார பிரதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழர் சமஉரிமை இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சைவ மக்களை அவமதித்த அரசாங்கத்தின் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மேற்படி இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழர் சமஉரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இந்து விவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த இந்து மக்களையும் வேதனையடையச் செய்துள்ளது.

கடந்த காலங்களில் இந்து மத விவகாரங்களுக்கு என தனி அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 
ஆனால், நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய அரசு முஸ்லிம் இனத்தவர் ஒருவரை இந்து மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமித்ததன் மூலம் இந்து மதத்தை அவமதித்திருக்கின்றது.

ஜனாதிபதியோ பிரதமரோ இந்து அல்லது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிப்பார்களா? அல்லது இந்து அல்லது பௌத்தன் ஒருவரை இஸ்லாம் விவகார அமைச்சராக நியமிக்க முடியுமா? அந்த மதத்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?

எனவே, மேற்படி பிரதி அமைச்சர் நிமயனத்தை ஒட்டுமொத்த சைவ மக்களின் சார்பிலும் தமிழர் சமஉரிமை இயக்கம் மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. அரசின் இந்தச் செயலுக்கு எமது வன்மையான கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்றோம். – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.