மாட்டிறைச்சி வியாபாரியான மஸ்தான் எப்படி இந்து கலாசார பிரதி அமைச்சராக இருக்க முடியும்?

வியாழன் ஜூன் 14, 2018

மாட்டு இறைச்சி வியாபாரியான காதர் மஸ்தான் எப்படி இந்து கலாசார பிரதி அமைச்சராக இருக்க முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்து கலாசார அமைச்சராக முஸ்லிம் ஒருவர் ஏன் இருக்க முடியாது? என, சக மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார். 

இந்து கலாசார பிரதி அமைச்சராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். 

இந்த நியமனத்திற்கு இந்துக்கள் மத்தியில் இருந்தும் இந்து அமைப்புக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. பலரும் பலவாறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலமான எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. 

இந்நிலையில், முஸ்லிம் ஒருவர் ஏன் இந்து கலாசார அமைச்சராக இருக்க முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயுப் அஸ்மின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகிர்தன், மாட்டு இறைச்சி வியாபாரியான காதர் மஸ்தான் எப்படி இந்து கலாசார பிரதி அமைச்சராக இருக்க முடியும் எனக் கேட்டுள்ளார். 

மேலும், முஸ்லிம் விவகார அமைச்சராக முஸ்லிம் இனத்தைச் சாராத ஒருவரை நியமித்தால் ஏற்பீர்களா? எனவும், அவ்வாறான வரலாறு இருக்கின்றதா எனவும் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.