மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

திங்கள் ஓகஸ்ட் 03, 2015

மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகமெங்கும் கொழுந்து விட்டு எரியும் நிலையில் மாணவர்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டத்தில் குதித்து வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தின் அருகே உள்ள அரசு மதுபானக் கடையை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். 

 

மாணவர்கள் நேரடியாக இது போன்ற போராட்டத்தை முன்னெடுக்கும் போது இப்போராட்டத்திற்கு செவி சாய்த்து அங்குள்ள மதுக் கடையை மூடியிருக்க வேண்டும் அரசு நிறுவனம். ஏற்கனவே பலமுறை இக்கோரிக்கை வைக்கப்பட்ட போதும் அரசு அலட்சிய போக்கையே கடைபிடித்து வந்துள்ளது. இம்முறை போராட்டம் வலுப்பெற்ற நிலையில் அரசு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை மூலமாக வன்முறையை ஏவிவிட்டுள்ளது . இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். மேலும் ஆண்கள் பெண்கள் என்று வேறுபாடு பாராமல் பல மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது காவல்துறை. நாட்டின் தூண்களான மாணவர்களை தாக்குவது மக்களாட்சிக்கு முற்றிலும் விரோதமான செயலாகும். எந்த அரசும் செய்யக் கூடாத செயலாகும். அரசின் முழு ஆதரவோடு காவல்துறை இப்படியான வன்முறையில் ஈடுபடுவது மக்களாட்சியை கேலிக்குரியதாக்கிவிடும். 

 

நடந்து முடிந்த இந்த தவறை தமிழக அரசு ஒப்புக் கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அனைத்து காவல்துறையை சேர்ந்தவர்களையும் உடனடியாக அரசு பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் காக்கிச் சட்டை அணியாத காவலர்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது காணொளி காட்சியில் பதிவாகியுள்ளது. பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மாணவர் தாக்குதலில் ஈடுப்பட்ட அனைத்து காவலர்களையும் பணி நீக்கம் செய்ய தமிழ்த் தேசிய கூட்டமைக்கு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது, மேலும் அரசு மது ஒழிப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டை உடனடியாக அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.