மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம், வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது

Thursday June 14, 2018

வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் ஆசிரியரும் வட்டுக்கோட்டையில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்துபவருமான ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுச் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது கல்வி நிலையத்தில் வைத்து 12 வயதுக்கு குறைந்த சில மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த சில தினங்களாக சிலர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல்களை வழங்கினர் எனவும் அதன் அடிப்படையிலேயே குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் எனவும் தெரியவருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக வலி.மேற்கு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த ஆசிரியர் கல்வி கற்பிக்கும் கல்லூரிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து அதிபர் அந்த ஆசிரியரை கல்லூரியை விட்டு இடைநிறுத்தினார். 

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.