மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய தயாசங்கர் சிங் கைது .

சனி ஜூலை 30, 2016

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய உ.பி. பாஜக முன்னாள் துணைத் தலைவர் தயாசங்கரை போலீசார் கைது செய்தனர்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங், மாயாவதியை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. 

இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மாயாவதியை இழிவுபடுத்தி பேசியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் உ.பி. துணைத்தலைவர் பதவி மற்றும்  கட்சியிலிருந்தும் ஆறு ஆண்டுகளுக்கு தயாசங்கர் சிங் நீக்கப்பட்டார். அதையடுத்து,

 அவருக்கு எதிராக, லக்னோ நகரில் உள்ள ஹஜ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜூலை 20-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், தயாசங்கர் சிங் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 இந்த வழக்கில், தயாசங்கர் சிங்குக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத பிடியாணையை லக்னோ பெருநகர நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தயாசங்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பீகாரின் புக்ஸர் என்ற இடத்தில் உத்தரப்பிரதேச மற்றும் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர்.