மாய மானா? மைல் கல்லா? - கலாநிதி சேரமான்

ஞாயிறு செப்டம்பர் 27, 2015

(இக்கட்டுரை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா அரசுக்கு ஆதரவான நீர்த்துப் போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் 23.09.2015 அன்று எழுதப்பட்டது).

நான்காம் கட்ட ஈழப்போரிலும், அதனையொட்டிய காலப்பகுதியிலும் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு பன்னாட்டு அம்சங்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையுடன் வெளியாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் செயலகத்தின் அறிக்கை தமிழ்த் தேசியப் பரப்பில் சலசலப்புக்களை தோற்றுவித்துள்ளது.

 

தமிழீழத்தில் நிகழ்ந்தது இனவழிப்பு என்பதை இவ் அறிக்கை பிரகடனம் செய்யத் தவறியிருப்பதும், முற்று முழுதான பன்னாட்டு நீதி விசாரணையைப் பரிந்துரை செய்வதை விடுத்துக் கலப்பு நீதிமன்றத்தை முன்
மொழிந்திருப்பதும், தமிழ்த் தேசியத் தளத்தில் பற்றுறுதியுடன் செயற்படும் பலருக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது. மறுபுறத்தில் அல்பிரட் துரையப்பா, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோரின் மறு அவதாரமாக அடிவருடி அரசியலை முன்னெடுக்கும் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன், இராஜவரோதயம் சம்பந்தன் போன்றோரைப் பொறுத்தவரை இவ்வறிக்கையில் சிங்களத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விடத் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் எவையுமற்ற பலவீனமான குற்றச்சாட்டுக்களே ஆத்ம திருப்தியை அளித்திருக்கின்றன.

 

உண்மையில் ஐ.நா. மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையாலும், அது பரிந்துரை செய்திருக்கும் கலப்பு நீதிமன்றத்தாலும் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டுமா? அல்லது கடந்த காலங்களைப் போன்று தமிழர்களை ஏமாற்றும் படலத்தை மீண்டும் உலக வல்லரசுகளும், சக்தி வாய்ந்த நாடுகளும் மேற்கொள்வதற்கு இவ் அறிக்கை வழிகோலியிருக்கின்றதா? என்பதே எம்மவர்களிடையே எழுந்திருக்கும் முக்கியமான கேள்விகளாகும். இவற்றுக்கான பதிலை, இனவழிப்பிற்கு நீதிதேடல், தமிழீழ தனியரசுக்கான அரசியல் போராட்டம் என்ற இரண்டு கோணங்களின் ஊடாக வழங்குவதற்கு இக்கட்டுரை முற்படுகின்றது.

 

ஐ.நா. முன்மொழிந்திருக்கும் கலப்பு நீதிமன்றம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஏனென்றால் யுத்த காலத்தில் தமது படையினர் அதியுச்ச ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்கள் என்றும், படையினருக்கு ஏற்பட்டுள்ள ‘அபகீர்த்தியை’ உள்நாட்டு விசாரணைகள் ஊடாகத் துடைக்கப் போவதாகவும் கூறிவந்த சிங்கள அரசுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையிலேயே ஐ.நா.வின் கலப்பு நீதிமன்ற முன்மொழிவு அமைந்துள்ளது. அதுவும் சிறீலங்கா அரசின் நீதித்துறை போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவற்றை விசாரணை செய்வதற்கான ஆற்றலையோ அன்றி கட்டுமாணங்களையோ கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா.வின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பது சிங்களத்தின் முகத்தில் கரியைப் பூசுவதாக உள்ளது.

 

அடுத்தது கலப்பு நீதிமன்றத்தின் உள்ளடக்கம். ஐ.நா. மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கலப்பு நீதிமன்றத்தில் பன்னாட்டு நீதிபதிகள், குற்றவியல் வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று மட்டும் குறிப்பிடப்படவில்லை. மாறாக சிறீலங்கா அரசின் நீதித்துறைக்கு உட்படாது சுயாதீனமான முறையில் குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடியதும், குற்றவியல் வழக்குகளைத் தொடுக்கக்கூடியதுமான கட்டமைப்பையும், தனியான பாதுகாப்புப் பிரிவையும், சாட்சிகளைப் பாதுகாக்கக்கூடிய பொறிமுறையையும் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் கொண்டிருக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றம் வலியுறுத்தியிருக்கின்றது.

 

சிங்களத்தைப் பொறுத்தவரை இது வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய ஒன்று. ஏனென்றால் ஒரு கதைக்கு ஐ.நா.வின் பரிந்துரைக்கு அமைய கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஏறத்தாழ ஏழு தசாப்த கால வரலாற்றை சிறீலங்காவின் நீதித்துறை கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்ற பன்னாட்டுக் குற்றங்களை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் ஆளுமையோ, கல்வியறிவோ அன்றி அனுபவமோ உடைய நீதிபதிகள் எவருமே உள்நாட்டில் இல்லை. அதேபோன்று இவ்வாறான குற்றங்களை விசாரணை செய்யும் அனுபவமுடைய அதிகாரிகளும், குற்றவியல் வழக்குத் தொடுநர்களும் உள்நாட்டில் இல்லை. இவ்வாறான பின்புலத்தில் ஐ.நா. பரிந்துரை  செய்திருக்கும் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும் பட்சத்தில் அதில் பன்னாட்டு நீதிபதிகளும், குற்றவியல் விசாரணையாளர்களும், வழக்குத் தொடுநர்களுமே ஆதிக்கம் செலுத்தப் போகின்றார்கள். அதில் சிங்கள தேசத்து நீதித்துறையின் பங்கு ஒப்புக்கு மட்டுமே இருக்கப் போகின்றது.

 

இதேபோன்றதுதான் கலப்பு நீதிமன்றத்தின் அதிகாரம். 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக் குழு போன்றதன்று கலப்பு நீதிமன்றம். தேவையேற்படும் பொழுது சந்தேக நபர்களை (அவர்கள் யாராக இருந்தாலும்) கைது செய்வதற்கும், அவர்களை விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்வதற்கும், அவர்களைத் தண்டிப்பதற்குமான முழு அதிகாரங்களையும் ஐ.நா. பரிந்துரை செய்திருக்கும் கலப்பு நீதிமன்றம் கொண்டிருக்கும். கண்காணிப்புக் குழு போன்று வெறுமனவே யுத்த நிறுத்த மீறல்களைப் பதிவு செய்து கண்டன அறிக்கைகளை வெளியிடும் ஓர் அமைப்பாக அது இருக்கப் போவதில்லை.

 

இந்த வகையில் போர்க் குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் விசாரணை செய்வதற்குக் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மேற்கொண்டிருக்கும் பரிந்துரை வரவேற்கத் தக்கதே. தவிர கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதோடு மட்டும் நின்று விடாது இனவழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற பன்னாட்டுக் குற்றங்களை உள்நாட்டிலும் குற்றச்செயல்களாக அறிவிக்கும் சட்டங்களை சிறீலங்கா அரசாங்கம் இயற்ற வேண்டும் என்றும் தனது பரிந்துரையில் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. ஒரு கதைக்கு இப் பரிந்துரையையும் சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்தும் பட்சத்தில், எதிர்காலத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் மீது உள்நாட்டிலேயே இனவழிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்படும் சூழல் உருவாகி விடும்.

 

இவையயல்லாவற்றையும் விட இன்னுமொரு முக்கியமான அம்சத்தையும், ஐ.நா. மன்றத்தின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை கொண்டுள்ளது. இறுதிப் போரில் சிங்களப் படைகளும், அவர்களை வழிநடத்திய ஆட்சியாளர்களும் புரிந்த போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவை இனப் பாகுபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை என்பது நிரூபணமாகும் பட்சத்தில் அவை இனவழிப்
பாக வரையறுக்கப்படும் என்பதுதான் அது. ஐ.நா.வின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை சிங்களத்தின் வயிற்றில் புளியைக் கரைப்பதற்கு இதுவும் இன்னுமொரு காரணமாகும்.

 

இத்தருணத்தில் எம்மை நோக்கி வாசகர்கள் ஒரு கேள்வியை எழுப்பக்கூடும். ஐ.நா. பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதுதான் அது. இதற்கான பதில் ‘இல்லை’ என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கியுள்ளது. ஐ.நா. மன்றத்தின் அறிக்கை வெளிவந்த மறுகணமே கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சிற்கு இடமில்லை என்ற திட்டவட்டமான அறிவித்தலை சிங்களம் வெளியிட்டிருக்கின்றது. நல்லாட்சியின் நாயகர்கள் என்று இன்று உலகின் சக்தி வாய்ந்த சில நாடுகளால் போற்றிப் புகழப்படும் மைத்திரி, ரணில், சந்திரிகா போன்றவர்கள் ஒரு பேச்சுக்கு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு இணங்குகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதனைப் பார்த்துக் கொண்டு சிங்கள இனவாதம் என்ன வாளாவிருக்கப் போகின்றதா? ஈழத்தீவு முழுவதும் புத்த பகவானால் சிங்கள இனத்திற்கு முதிசமாகக் கையளிக்கப்பட்ட புனித பூமி என்ற மகாவம்ச காலச் சித்தாந்தத்தில் மூழ்கிக் கிடக்கும் சிங்களம், உடனே துள்ளியயழும்பி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் எகிறிப் பாயத் தொடங்கி விடும்.

 

இதையும் தாண்டி கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதானால் அது சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஐம்பத்தொரு விழுக்காடு பெரும்பான்மையை இன்றைக்கல்ல, என்றைக்குமே எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களாலும் பெற முடியாது. அதனையும் மீறி கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக சிங்கள‡பெளத்த பேரினவாதத்தின் காவலாக விளங்கும் சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் விழித்தெழுந்து அச்சட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமான சட்டமாகப் பிரகடனம் செய்து விடும்.

 

இதனையும் கடந்து கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், சிறீலங்காவின் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஒரு பேச்சுக்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டாலும்கூட, தேசத்தின் இறையாண்மை, பெளத்த மதத்தின் பாதுகாப்பு, சிங்கள மொழியின் இருப்பு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான அரசியலமைப்பின் திருத்த விதிகளை சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தால் செயலிழக்க வைக்க முடியும்.

 

இதனைத் தடுப்பதாயின் சிறீலங்காவின் அரசியலமைப்பு மறுசீரமைக்கப்படும் பொழுது அதில் நாட்டின் இறையாண்மை, பெளத்த மதத்தின் பாதுகாப்பு, சிங்கள மொழியின் இருப்பு போன்ற சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். இது என்றைக்குமே நடக்கப் போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் கலப்பு நீதிமன்றம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு மாய மானாகத்தான் இருக்கப் போகின்றது. அதற்காக ஐ.நா. மேற்கொண்டிருக்கும் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையைத் தேவையற்ற ஒன்றாக நாம் உதாசீனம் செய்து விட முடியாது. ஏனென்றால் இனவழிப்பிற்கான நீதிதேடலில் ஒரு மாய மானாகக் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை இருந்தாலும், தமிழீழத் தனியரசுக்கான தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் இது ஓர் மைல் கல்லாகவே கருதப்பட வேண்டும்.

 

முதலாவதாக இவ்வாறான பரிந்துரையை ஐ.நா. மன்றம் மேற்கொண்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஏனென்றால் சிங்கள தேசத்தின் அரச கட்டமைப்புக்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதி கிட்டாது என்ற யதார்த்தத்தை ஐ.நா. ஏற்றுக் கொண்டிருப்பதையே அதன் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை உணர்த்துகிறது. இரண்டாவதாக ஐ.நா.வின் பரிந்துரையை சிங்களம் நிராகரித்திருப்பதென்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதன் ‘நல்லாட்சி’ முகத்திரையைக் கிழித்தெறிவதற்கும், கலப்பு நீதிமன்றம் சாத்தியமாகாத இடத்தில் பன்னாட்டுக் குற்றவியல் நடுவர் மன்றம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதிவழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்குமான சூழலுக்குமே வழிகோலி விட்டிருக்கின்றது.

 

இன்றைய உலகச் சூழலில் சீனா, ரஷ்யா ஆகியவற்றின் ஆதரவின்றி சிங்களத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா. மன்றத்தாலோ, ஏனைய உலக நாடுகளாலோ நிறுத்த முடியாது. ஆனாலும் ஐ.நா. மன்றம் நினைத்தால் சீனா, ரஷ்யா ஆகியவற்றின் ஒப்புதல் இன்றி அதன் சாசனத்தின் இருபத்து இரண்டாவது சரத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நீதிவழங்கும் வகையில் தனியானதொரு பன்னாட்டுக் குற்றவியல் நடுவர் மன்றத்தை நிறுவ முடியும். இதற்கு ஐ.நா. மன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஐம்பத்தொரு விழுக்காடு நாடுகளின் ஆதரவு மட்டும் போதும்.

 

எனவே ஐ.நா. பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்றம் சாத்தியமற்றது என்ற வகையில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கக் கூடிய விதத்தில் தனியான பன்னாட்டுக் குற்றவியல் நடுவர் மன்றம் உருவாக்கப்படுவதை வலியுறுத்தி எமது அடுத்த கட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எமது தொடர்ச்சியான பரப்புரை நடவடிக்கைகளின் பெறுபேறாகக் காலநீட்சியின் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தனியானதொரு பன்னாட்டுக் குற்றவியல் நடுவர் மன்றம் உருவாக்கப்படும் பொழுது, இனவழிப்பிற்கான பரிகார நீதியாகத் தமிழீழத் தனியரசை நாம் வலியுறுத்த முடியும்.

 

இவையயல்லாவற்றையும் விட இன்னுமொரு சாதகமான அம்சமும் ஐ.நா.வின் அறிக்கையில் காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டில் இருந்து சிங்களம் கட்டவிழ்த்து விட்ட இனவெறி நடவடிக்கைகள் அனைத்துமே ஐ.நா.வின் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் அது. அதாவது சிங்கள இனவாதம் பற்றி இதுகாறும் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் உண்மையயன இப்பொழுது ஐ.நா. ஏற்றுக் கொண்டுள்ளது.

 

இந்த வகையில் ஐ.நா. மன்றத்தின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை என்பது தமிழின அழிப்பிற்கான நீதிதேடலில் மாய மானாக இருந்தாலும், தமிழீழத் தனியரசு நோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லாகவே அமைந்துள்ளது.

 

நன்றி: ஈழமுரசு