மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் - 9.12.17

December 04, 2017
தமிழ் மாற்றுத் திறனாளிகளால் வருடந்தோறும் வடக்கிலும் கிழக்கிலும்  தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா  நடாத்தப்படுகின்றது . 
 
அதனை முன்னிட்டு லண்டலில் நடாத்தப்பட இருக்கும் இசை நிகழ்ச்சிக்கு பிரித்தானியாவில் வாழும் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு அப்போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைத்து தமிழ் மாற்றுத் திறனாளிகள் சார்பாக, அப்போட்டிகளை ஒருங்கிணைக்கும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு (DATA ) அழைப்பு விடுக்கின்றது.
 
போர் தாண்டவமாடிய பூமியில் அதன் வலிகளாக வடுக்களாக வாழும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஓர் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு நடாத்தப்படும்  இப்போட்டிகளில் பல ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்கின்றனர். 
 
2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவை தமிழ் மாற்றுத் திறனாளிகளே தலைமை ஏற்று ஒருங்கிணைத்து நடாத்துகின்றார்கள்.
 
தமிழ் மாற்றுத் திறனாளிகள் ஒரு பேசு பொருளாக இருக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் முன்னேற வேண்டும்  என்ற நோக்கோடு நாம் பல சவால்களின்  மத்தியில் இந்த விழாவை நடாத்துவதாக கூறும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் திரு சி.பரமானந்தம் , வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாற்றுத் திறனாளிகளை மைதானங்களுக்கு கூட்டி வருவதே ஒரு சவாலான விடயம் என கூறுகின்றார். 
 
தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவில் பங்கு கொள்ளும் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள தெரிவாகிவருகின்றார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள விளையாட்டு விழாவை  முன்னிட்டு ஒரு மாலை : மாற்றுத்திறனாளிகளுக்காக என்னும் இசை நிகழ்ச்சி லண்டனில்  Zoroastrian Centre,   440 Alexandra Ave, Harrow   HA2 9TL  இல் ( 09.12.2017) டிசம்பர் மாதம் 9ம் திகதி மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
 
 இந்நிகழ்வில் வடக்கிலும் கிழக்கிலும் போட்டிகளை ஒருங்கிணைக்கும் மாற்றுத்திறனாளி தலைவர்கள் காணொளி மூலம் கலந்துகொண்டு  இப்போட்டிகள் குறித்து விளக்கத்தினை  அளிப்பார்கள். 
 
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
 
மேலதிக விபரங்களுக்கு 
 
ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்காக...
செய்திகள்