மாற்றம் மட்டுமல்ல மாறாதது சிங்களப் பேரினவாதமுமே!

புதன் சனவரி 06, 2016

சிறீலங்காவின் ஆட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடங்களை எட்டுகின்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச பரிவாரங்களை விரட்டிவிட்டு, அவர்களுடன் கூட இருந்து தமிழினப் படுகொலையில் பங்கேற்ற மைத்திரிபால சிறீசேனவை ஆட்சிக்கு கொண்டுவர சிங்கள தரப்பைவிட மேற்குலகம் அதிகம் விரும்பியது. சிறீலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் மகிந்தவின் கடும்போக்குவாதம் இல்லாத இன்னொரு தலைமையின் ஊடாக தமிழ் மக்களின் இனச்சிக்கலை இன்னொரு திசையில் கொண்டுசெல்லும் அதேவேளை, சீன சார்புக் கொள்கையில் இருந்து சிறீலங்காவை மீட்டெடுத்துவிடலாம் என்பதும்தான் அது.

ஆனால், இலங்கைத் தீவில் எந்தச் சிங்களத் தலைமை ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்பதும், ஆட்சி மாறினாலும் அவர்களின் இனவாதக் கொள்கை மாறாது என்பதும் தமிழ் மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ள அனுபவப்பாடம். ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று நம்பிக்கையை விதைத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை. மைத்திரிபால ‡ ரணில் கூட்டணிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் ஊடாக தீர்வைப் பெறமுடியும் என்று கூறி, தமிழ் மக்களை அவர்களுக்கே வாக்களிக்க வைத்தது. மைத்திரிபால ‡ ரணில் கூட்டணியை தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெறவைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, கடந்த ஓராண்டில், புதிய மாற்று அரசு தமிழர்களுக்கு எதனை வழங்கிவிட்டது என்பதைச் சொல்லக்கூட திரணியற்று இன்று நிற்கின்றது. ஓராண்டென்ன நூறாண்டு கடந்தாலும் சிங்களப் பேரினவாதம் மாறப்போவதில்லை.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது, சிறைகளில் விசாரணையின்றி வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிப்பது, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது என்பன உட்படப் பல வாக்குறுதிகளை மைத்திரி ‡ ரணில் கூட்டு அரசை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கியது. ஆனால் இவற்றில் ஒன்றைக்கூட இதுவரை தீர்த்துவைக்க முடியவில்லை.

காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் சிறீலங்கா இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டே காணாமல் போயிருக்கின்றார்கள். இதற்கான ஆதாரங்கள் பெருமளவில் இருக்கின்றன. இறுதி இனஅழிப்புப் போரின் பின்னர், முள்ளிவாய்க்காலில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினரிடமே தங்கள் உறவுகள் கையளிக்கப்பட்டதாக உறவுகளால் தெரிவிக்கப்படுகின்றபோதும், இன்றுவரை அந்தக் களமுனையில் நின்ற எந்தவொரு இராணுவத்தினரும் இது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

அவ்வாறு விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்துக்கூட சிங்கள தரப்பில் இருந்து இதுவரை எழவில்லை என்பதே இங்கு முக்கியமானது. இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாதவர்கள் என்று சிங்கள தரப்பு வாதிடும் அதேவேளையில்தான், காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். ஆனால், இது பிரகீத் எக்னெலிகொடவிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை கண்டறிவதற்காகவோ, அன்றி அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதற்காகவோ இந்த விசாரணை இத்தனை துரித கதியில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை ஐ.நா. மனித உரிமைகள் சபையை நம்பவைப்பதற்கும் மைத்திரி - ரணில் கூட்டணி இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக மைத்திரி அரசு வாக்குறுதி அளித்து, அதற்கான நாளும் குறித்தது. கூட்டமைப்பும் இதனைப் பெரும் தம்பட்டம் அடித்து, அரசியல் கைதிகளை வரவேற்கக் காத்திருப்பதுபோல் கூறியது. அந்த நாளும் வந்துபோனது. ஆனால் யாரும் விடுவிக்கப்படவில்லை. இறுதியில் அரசில் இருப்பவர்களே, ‘தமிழ் அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைகளில் இல்லை’ என்று பெரும் குண்டைத் தூக்கிப்போட்டு அந்த எதிர்பார்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

தமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதாக கூறப்பட்டது. தற்போது வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் 700 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அங்கு சென்று பார்த்த மக்கள் தங்கள் நிலங்கள் எங்கே என்று தேடியலையும் நிலையும், தங்கள் வீடுகளையும், கட்டடங்களையும் காணாது பரிதவிக்கும் நிலையுமே இருந்துள்ளது. ஆனால், இந்த நில விடுவிப்பை பெரும் வெற்றிவிழாவாகக் கொண்டாட இம்முறை தேசிய பொங்கல் தின விழாவை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது மைத்திரி - ரணில் கூட்டணி. இப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பெரிதாக எதோ கொடுக்கப்பட்டுவிட்டதாக காண்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 5 ஆயிரத்து 710 ஏக்கர் நிலங்களையும் விடுவித்து, முகாம் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்திய பின்னர் யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவை கொண்டாடுங்கள் என வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் மைத்திரி - ரணில் கூட்டணி அரசுக்கு அறிவித்திருக்கின்றார்.

இப்போது புது அறிவிப்பொன்றை மைத்திரிபால வெளியிட்டிருக்கின்றார். இடம்பெயர்ந்து வாழும் ஒரு இலட்சம் பேருக்கு தங்கள் அரசினால் நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த மக்கள் நிலம் இல்லாமல் ஒன்றும் இடம்பெயர்ந்து வாழவில்லை. இவர்களது நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதனாலேயே அவர்கள் அகதிகளாக இன்னும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் இடங்களைவிட்டு இராணுவம் வெளியேறினாலேபோதும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பிவிடுவார்கள். ஆனால், அந்த நிலங்களை நிரந்தர இராணுவ முகாம்க ளாக்கிவிட்டு, அந்த மக்களுக்கு வேற்று நிலங்களை வழங்கி, தமிழர்களின் சொந்த நிலங்களை நிரந்தரமாகக் கைப்பற்றுவதே மைத்திரியின் திட்டம்.

ஆனால், மைத்திரிபால காணி வழங்குதல் குறித்த உறுதிமொழியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாகவே வரவேற்று இதுவொரு ஆரோக்கியமான நகர்வு எனவும் பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார்.  அதேவேளை, மைத்திரி - ரணில் கூட்டணி தமிழர்களுக்கு இவ்வாறெல்லாம் செய்வதாகக் காண்பிப்பது அம்மக்கள் மீது இருக்கும் கரிசனையால் என்று யாரும் நம்பிவிட மாட்டார்கள். எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு சிறீலங்கா மீது நடவடிக்கை எதனையும் எடுத்துவிடக்கூடாது என்ற அச்சத்தினால் மட்டுமே என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது சிங்களத் தலைமைகளுக்கு மட்டுமல்ல, தமிழ் தலைமைகளுக்கும் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. சிங்களம் தமிழர்களுக்கான தீர்வை, தமிழர்களுக்கான உரிமையை தங்கத் தட்டில்வைத்துத் தந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இலவம் காத்த கிளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பது மட்டுமல்ல, தமிழர்களையும் காத்திருக்குமாறு கூறுவதுதான் தமிழ் மக்களுக்கு விரகத்தியை ஏற்படுத்துகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த சந்தர்ப்பவாத அரசியிலின் எதிர்வினையே தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்ற இறுமாப்புடன், தாங்கள் சொல்வதையும், தாங்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுத் தருவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மிதவாத நம்பிக்கையுடன் இருந்த கூட்டமைப்பின் தலைமைகளுக்கு, இப்போது தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் பேரச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அதனாலேயே, தமிழ் மக்கள் பேரவையின் மீது சேறடிப்புக்களை கனகச்சிதமாக மேற்கொள்கின்றார்கள்.   

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு