மாற்றுக் களம்: பாலா பாராட்டிய குறும்படம்!

புதன் மே 02, 2018

திரைப்பட இயக்குநர் பாலாவின் பட்டறையில் சினிமா பயின்று ‘சிசு’ என்ற குறும்படத்தை இயக்கி கவனம் பெற்றிருக்கிறார் ராஜசேகர். இதுவரை 16 சர்வதேசக் குறும்பட விழாக்களில் ‘அப்பீஷியல் செலக்ஷன்’ ஆகத் தேர்வுசெய்யப்பட்டு திரையிடப்பட்ட கவுரவத்தைப் பெற்றிருக்கிறது ‘சிசு’. 11 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம், குழந்தை, தாய்மையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது.

“பயணங்களின் பிரியனாக இருப்பவன்தான் கலைஞனாக இருக்க முடியும். சினிமா வேலைகளுக்கு நடுவே இரண்டு நாட்கள் இடைவேளை கிடைத்தால் உடனே ஏதாவது ஒரு ஊருக்குப் புறப்பட்டுவிடுவேன். அதுபோன்ற வெவ்வேறு பயணங்களில் நான் சந்தித்த மூன்று சாமானிய மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம் அவர்கள் மூவரையும் வைத்து ஒரு சிறுகதை எழுதிய பிறகே தணிந்தது. சிறுகதை பிறகு 8 பக்கத் திரைக்கதையாக மாறியது.

திருமணத்துக்குமுன் கருவுற்ற சிசுவை வேண்டாம் என்று நினைக்கும் ஒரு இளம்பெண், 15 ஆண்டுகளாகக் குழந்தைபேறு இல்லாமல் கோயில்களை சுற்றி வரும் ஒரு பெண்மணி, வாழ வழிஇன்றிப் பிச்சைஎடுக்கும் ஒரு சிறுமி - என வெவ்வேறு விதமான சூழல்களை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் கதை.

நண்பர் ரமேஷ்பாபுவுடன் திரைப்பட வேலையாக ஊட்டிக்குப் போய்க்கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் “ஒரு நல்ல குறும்படத்துக்கான ஐடியா இருக்கிறதா?” என்று எதேச்சையாகக் கேட்டார். உடனே 8 பக்கத் திரைக்கதையை அவருக்குப் படிக்கக் கொடுத்தேன். படித்து முடித்ததுமே “இந்தக் குறும்படத்தை நானே தயாரிக்கிறேன்” என்று ஆர்வத்துடன் முன்வந்தார். அப்படித்தான் காகிதத்தில் இருந்த கதாபாத்திரங்கள் காட்சிக்கு இடம்பெயர்ந்தன’’

- எனும் ராஜசேகர் ‘சிசு’ குறும்படத்தை எடுத்து முடித்ததும் முதல் பிரதியைத் தன் குருவான பாலாவின் கையில் கொடுத்திருக்கிறார். “படத்தைப் பார்த்த பாலா, கை கொடுத்துப் பாராட்டியதோடு, ‘சீக்கிரமா படம் பண்ணு’ என்று வாழ்த்துக் கூறினார். சினிமாவில் கமல், பாலா இருவரும் என் மனதுக்கு நெருக்கமான படைப்பாளிகள்.

பாலாவிடம் ‘நான் கடவுள்’ படத்தில் வேலை பார்த்தது, எனக்குக் கிடைத்த முக்கியமான வாய்ப்பு. கமல் எழுதி, நடித்த படங்கள் எனக்குப் பெரிய பாதிப்பைக் கொடுத்தவை. இந்த அனுபவங்களோடு தனியே படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ‘சிசு’ கவுரவமான ஒரு முதல்படி, படத்தைப் பார்த்து நண்பர்கள் பாராட்டும்போது நம்பிக்கை அதிகமாகிறது” என்கிறார் ராஜசேகர்.