மாலைதீவு அதிபரை படுகொலை செய்ய முயன்ற சிங்களச் சிப்பாய்

ஞாயிறு நவம்பர் 08, 2015

மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீனை படுகொலை செய்ய சதி செய்ததாக,சந்தேகிக்கப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக, மாலைதீவு அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் அதிகாரபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் நாள் இவர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய, சினைப்பர் அணி சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், சிறிலங்கா படைகளில் பணியாற்றிய, மாலைதீவில் கைது செயய்யப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

இதற்கிடையே மாலைதீவு அதிபரைப் படுகொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்,27 வயதான, லகிரு மதுசங்க என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

இவர் மாலைதீவு அதிபரைப் படுகொலை செய்வதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டவர் என்று மாலைதீவு காவல்துறை தெரிவித்துள்ளது.இவரைக் குற்றவியல் நீதிமன்றம் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.