மாவீரர் நாள் அறிக்கை - சீமான்

வெள்ளி நவம்பர் 27, 2015

"ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை வீரன் பிரான்ஸ் பனானின் விடுதலையுணர்வு வித்திடும் தத்துவம். 

ஒரு தேசிய இனத்தின் ஆன்மா அதன் விடுதலை உணர்வில் அடங்கி இருக்கிறது . கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்க்குடிக்கு இப்பூமிப்பந்தில் உள்ளங்கை அளவிற்குச் சொந்த நாடில்லை. தமிழ்த்தேசிய இனத்திற்கென ஒரு நாடு தேவை என்பதைச் சிங்களப் பேரினவாதமும், உலகவல்லாதிக்கங்களும் தமிழினத்தின் மேல் செலுத்திய அழுத்தங்கள் மூலமும், இவ்வினம் அடைந்த அழிவுகளின் மூலமும், இத்தேசிய இனம் சந்தித்த இழிவுகள் மூலமாகவும் நிருபனமானது. மனிதனின் அடிப்படைத் தேவைகளின் முதன்மையான தேவை சுதந்திரம் என்பதை உணர்ந்த நமது ஈழ உறவுகள் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள எத்தனித்தது. அதனால்தான் உயிரையே விலையாக அளித்து, அந்த உயிரை விட உன்னதமான விடுதலையைக் கோரிக் களத்தில் நின்றார்கள். 

1948 ஆம் ஆண்டுப் பிப்ரவரி 4 அன்று இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற இலங்கையில், அந்தக் காலந்தொட்டே அந்த மண்ணில் வாழ்ந்த எமது தமிழ் மக்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டுக் காலப்போக்கில் அனைத்துத் துறைகளிலும் எம்மக்கள் சிங்களப் பேரினவாதத்தால் வஞ்சிக்கப்பட்டுப் பெருந்துயர் அடைந்தனர். தமிழர்களின் துயரம் தோய்ந்த உரிமை மறுக்கப்பட்ட வாழ்வியலை மாற்ற தந்தை செல்வா 30 வருடங்களுக்கும் மேலாகப் அகிம்சை வழி நின்று போராடினார். சனநாயக வழிக்குட்பட்ட அனைத்துப் போராட்ட வழிகளையும் பயன்படுத்திச் சிங்களப் பேரினவாதத்தின் கோர முகம் மாறாதா என மனமுருகி தமிழர் கூட்டம் நின்றது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசு அறம் பாடி துயர் நீங்க நின்ற தமிழின மக்களை ஆயுத வழி அடக்குமுறையின் கீழ் உட்படுத்தி உயிர் -உடமை, பறித்து மூன்றாம் தர குடிமக்களாகத் தமிழர்களை மாற்றியது. உயிரை விட மானமே பெரிது என வாழ்ந்த தமிழ்த்தேசிய இனத்தின் இளம் பெண்களின் கற்பு சிங்களர்களின் காமப்பசிக்கு இரையானது. 

தமிழனின் தொடைக்கறி சிங்களனின் கடை வீதிகளில் கிடைத்தன. தமிழச்சிகளின் மார்புக்கறி சிங்களனின் கடைகளில் தொங்கின. உயிரற்ற சடலமாய் ஒரு தேசிய இனமே மாறிப் போன அச்சூழலில் தான் தமிழ்த்தேசிய இனத்தின் உயிராய் அம்மக்களைக் காக்க விடுதலைப்புலிகள் தோன்றினார்கள். எதிரிகள் எதைக் கொண்டு தமிழினத்தை அடக்கி ஆள்கிறார்களோ அதைக் கொண்டே அவர்களை எதிர்கொண்டு வீழ்த்துவது என்று முடிவு செய்து உயிரை கொடுத்துத் தாய்மண்ணைக் காக்கிற வீரம் செறிந்த மாபெரும் போராட்டத்தைத் தனது அளப்பரிய மன உறுதியால் கட்டி எழுப்பினார் தேசியத்தலைவர் பிரபாகரன். 

உலரா உதிரமும், உறுக்குலையா உறுதியும் நிறைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நவம்பர் 27, 1982 அன்று சங்கர் என்ற செ.சத்தியநாதன் முதற் களப்பலியானார். தன்னைக் கொடுத்துத் தாய் மண்ணைக் காக்கிற புதிய தலைமுறை உருவானது. அவர் வழி வழி வந்த வீர மறவர்கள் தாய்மண்ணிற்காகவும், தமிழனத்திற்காகவும் தங்கள் உயிரை ஈகம் செய்து தமிழ்த்தேசிய இனத்தின் தெய்வங்களாக மாறிப்போனார்கள். அதன் பொருட்டே வருடந்தோறும் நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடர் எந்தி மாவீரர் தினம் தமிழ்த்தேசிய இனத்தால் கடைபிடிக்கப்பட்டு உலகத்தமிழர்களால் தமிழர்கள் வாழும் நாடுகளில் மாவீரர் தினம் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. 

இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுதவர்களுக்காக இறந்த அந்த ஈகமறவர்கள் நினைவைச் சுமந்து, அவர்கள் எந்தக் கனவை நிறைவேற்ற தனது உயிரை தியாகித்து இறந்தார்களோ அந்தக் கனவை நோக்கி ஒவ்வோருவரும் உழைக்க அடி மன ஆழத்தில் இருந்து இதய உறுதி எடுத்துகொள்ள நமக்குக் கிடைத்த பொன்னாள் இந்த மாவீரர் நாள். 

ஒரு கண்ணகியின் நியாய உணர்வு மன்னனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டியது என்பார்கள், ஒரு 9 வயது வியாட்நாம் சிறுமியின் நிர்வாணம் உலக அரங்கில் அமெரிக்காவிடம் இருந்து வியாட்னாமிற்கு விடுதலை பெற்றுத் தந்தது என்கிறது வரலாறு. அவ்வாறெனில் நமது விடுதலையின் 67 ஆண்டுகால அறவுணர்வு, உலகம் வியக்கும் போர்வீரம், எண்ணிலடங்கா தமிழர்களின் உயிர் விலை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர் தியாகம் இவை எல்லாம் இருந்தும் நமது ஈழவிடுதலைக்கு எது இடைக்கல்லாக இருக்கிறது? 
இந்த அறவுணர்வு சார்ந்த கேள்வியினை நெஞ்சிலே நிறுத்தி, இனவிடுதலைக்கான மறவுணர்வை நெஞ்சிலே விதைத்து எமது மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க இந்நன்னாளில் ”உறுதி ஏற்போம்”. 

கண் துஞ்சாது, வெயில்மழை பாராது தாய் மண் காக்க களத்தில் நின்ற மாவீரர்களின் பெருமூச்சு ஒவ்வொரு தமிழனையும் உசுப்பட்டும். உயிரற்ற உடலங்களாய் தன்னிலை மறந்து கிடக்கும் ஒரு தலைமுறையின் ஆழ்மனதிற்குள் தன்னை இழந்து மண்ணை மீட்கத் துடித்த மானமறவர்களின் மூச்சுக்காற்று சென்று முட்டடும்... முட்டடும்... 

விடுதலை விதைகளாய், விதைந்து கிடக்கும் எம் குல தெய்வங்களான மாவீரர்களின் தியாகம் இந்த உலகத்தில் தமிழர் இறையாண்மை பகரும் “ஈழம்” என்ற தேசத்தை அமைத்தே தீரும். அந்தச் சூழலை இந்த உலக அரசியலில், இந்திய அரசியலில், தமிழக அரசியலில் உருவாக்க நாம் ஒவ்வொருவரும் இந்த மாவீரர் நாளில் ”உறுதி ஏற்போம்”. 

விடுதலைக்குக் களமாடி 
வீரமரணம் அடைந்த 
மாவீரர்கள் அனைவருக்கும் 
நாம் தமிழர் கட்சியின் 
புரட்சிகர வீரவணக்கம்!!! 

- செந்தமிழன் சீமான்