மா சே துங்கை விமர்சித்த பேராசிரியர் நீக்கம்!

புதன் சனவரி 11, 2017

சீனாவில் சமூக வலைத்தளத்தில் மா சே துங்கை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பேராசிரியர் டெங் ஸியாசவ் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சீனாவில் கம்யூனிசப் புரட்சியை தலைமை தாங்கி நடத்தியதுடன், உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தியவர் மா சே துங். தன் வாழ்நாளெல்லாம் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக்குழுவையும், மையக்குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

 நவீன சீனாவை உருவாக்கிய சிற்பி என்று இன்றளவும் அவர் புகழப்படுகிறார். சீன பண நோட்டுகளிலும் அவரது படம்தான் இடம் பெற்றிருக்கிறது.அப்படிப்பட்ட மா சே துங்கைப்பற்றி ஷான்டாங் ஜியான்சு பல்கலைக்கழகத்தின் கலைத்துறை பேராசிரியர் டெங் ஸியாசவ் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.

குறிப்பாக சீனாவில் பஞ்சத்தால் 30 லட்சம்பேர் மரணம் அடைந்ததற்கும், கலாசார புரட்சியில் 20 லட்சம் பேர் இறந்ததற்கும் மா சே துங்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இது அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த கருத்து உடனடியாக சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் மா சே துங் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். “மா சே துங்கை விமர்சிப்பவர்கள், சீனாவின் எதிரிகள்” என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர்.இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பேராசிரியர் டெங் ஸியாசவ் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.