மிச்சேல் ஒபாமாவின் குழுவில் தமிழ் பெண்

வெள்ளி சனவரி 06, 2017

 மிச்சேல் ஒபாமா நடத்திவரும் கல்வியறிவு பிரச்சார குழுவில் தமிழ் வம்சாவழிப் பெண்ணான சுவேதா பிரபாகரன் இணைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சிறுவர், சிறுமியர் அனைவரும் பள்ளி கல்வியை நிறைவுசெய்து, கல்லூரியில் பயின்று பட்டதாரிகள் ஆகி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்க அதிபரின் மனைவியான மிச்சேல் ஒபாமா மாபெரும் கல்வியறிவு இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

‘பெட்டர் மேக் ரூம்’ (Better Make Room) என்ற இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவியர் இடையே கலந்தாய்வு மற்றும் தகவல்கள் பரிமாற்ற கட்டமைப்பு மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை கண்காணிக்கவும், ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவியர் கொண்ட ஒரு தனிக்குழு ஆலோசனைகளை அளித்து வருகிறது.

இந்தக் குழுவில் இடம்பெறும் 17 பேரை அதிபரின் வெள்ளை மாளிகை தேர்வு செய்துள்ளது. இந்த 17 பேரில் ஒரே இந்திய வம்சாவழி மாணவியாக தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சுவேதா பிரபாகரன்(16) இடம்பெற்றுள்ளார்.

இவரது பெற்றோர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று, அந்நாட்டின் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகின்றனர். இங்குள்ள இன்டியானாபோலிஸ் பகுதியில் பிறந்த சுவேதா, விர்ஜினியா மாநிலத்தில் உள்ள தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.

மாணவ-மாணவியர் நாட்டின் தலைசிறந்த அறிவியலாளர்களாகவும், பொறியாளர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இளைய தலைமுறையினர் உருவாக லாபம் கருதாத தொண்டு நிறுவனம் ஒன்றையும் சுவேதா பிரபாகரன்(16) நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய ஆலோசகர்கள் அனைவரும் இன்று வெள்ளை மாளிகைக்கு சென்று மிச்சேல் ஒபாமாவிடம் ஆசி பெறுகின்றனர்.