மீண்டும் கூறாகும் மாவீரர் நாள்! - கந்தரதன்

சனி நவம்பர் 19, 2016

தாயகத்தில் இன்று சுமூகநிலை நிலவுவதாகச் சொல்லப்பட்டாலும் அங்கு இன்றுள்ள நிலை மிகவும் மோசமாக உள்ளமை அனைவராலும் உணரக்கூடியதாக உள்ளது. தேசிய மாவீரர் நாள் அண்மித்துவரும் நிலையில் அதனை முடக்குவதற்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் படுகொலை மற்றும் கைதுகளையும் கடத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொள்ளுவதற்கு சிறீலங்கா பேரினவாத அரசு கங்கணம் கட்டிநிற்கின்றது. இதற்கு விசேட குழுக்களையும் நியமித்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் புலம்பெயர் தேசங்களில் தமது கையாலாகாத் தனங்களைக் காட்ட எத்தனித்து நிற்கின்றது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இரண்டு மாவீரர் நாள்களை வைத்துத் தோல்விகண்ட சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்கும் குறித்த நபர்கள், பிரான்சில் இரண்டாவது மாவீரர் தினத்தை நடாத்த முனைப்புக்காட்டிவருகின்றனர். இம்முறை இவர்கள் வழமையாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் வழமையாக நடாத்தப்படவுள்ள மாவீரர் நாள் சுவரொட்டிகளை அப்படியே எடுத்து அதன் முகவரியை மாற்றி, பாரிசு லாச்சப்பல் வர்த்தக நிலையங்கள் எங்கும், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் நாள் சுவரொட்டிகளுக்கு அருகில் ஒட்டப்பட்டுள்ளன. இது புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறீலங்கா இனவாத அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கும் குறித்த கும்பல், புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளை முற்றாக முடக்கும் செயல்களில் இறங்கியுள்ளமை அனைவரும் அறிந்ததே. இவர்கள் தேசிய செயற்பாட்டாளர்களை படுகொலை செய்வது அல்லது அவர்களை வலுவிழந்தவர்களாக்கி மாற்றுதல், தேசிய செயற்பாட்டாளர்களை உளவியல் ரீதியில் பாதிக்கச்செய்து, அவர்களை முற்றாக தேசியப் பணிகளில் இருந்து அப்புறப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளைச் செய்ததுடன், பிரான்சு சட்டதிட்டங்களை மீறி வழமையான நிகழ்ச்சி நிரலை குழப்பி மக்கள் ஒன்று கூடுவதை குறைவடையச்செய்து, மக்களையும் தேசியப் பங்களிப்பைச் செய்யவிடாது தடுத்து நிறுத்துவதே இவர்களின் பெரும் இலக்காக உள்ளது.

பாரிசு, லாச்சப்பல் வர்த்தக நிலையங்களில் முரணான சுவரொட்டிகளை ஒட்டமுனைந்தவர்களை தடுத்து நிறுத்திய வர்த்தகர்களும் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த சுவரொட்டிகள் பலவந்தமாக ஒட்டப்பட்டதுடன், அவை அகற்றப்படக்கூடாது எனவும் இவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர்களின் சுவரொட்டிகளை எப்போதும் புனிதமாகவே மக்கள் நோக்குவர், ஆனால், மாவீரர் சுவரொட்டிகளையே அவமானமாக பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு விடயம் குறித்த நபர்களால் ஒட்டப்பட்டுள்ள மாவீரர் நாள் சுவரொட்டிகள் இரண்டு பக்கமும் அச்சடிக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர்களின் மேல் ஒட்டுப்பசை பூசப்பட்டே ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அது மாவீரர்களை மேலும் அவமதிக்கும் செயலாகும்.  

கடந்த காலங்களில், இரண்டு மாவீரர் நாளை நடாத்துவதற்கு குறித்த குழப்பவாதிகள் மக்கள் முன்வைத்த கருத்துக்களை மீண்டும் இங்கு நினைவுபடுத்த வேண்டியமை முக்கியத்துவம் பெறுகின்றது. புலம்பெயர் தேசங்களில் மண்டபங்களில் நிகழ்த்தப்படும் மாவீரர் நாள்கள் தவறானவை எனவும், அவை தாயகத்தில் திறந்தவெளிகளில் நடாத்தப்படுவது போன்று நடாத்தப்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்ததுடன், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் கேலிக்கூத்தானவை எனவும் விமர்சித்திருந்தனர். கடும் குளிரான காலநிலை நிலவும் கார்த்திகை மாதத்தில் திறந்த வெளியில் இரண்டு தடவை போட்டி மாவீரர் நாளை நடாத்தி பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்திருந்தனர். குறித்த நிகழ்வுகளில், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும் அவர்களின் குடும்பத்தினருமே கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலாகாலமாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் நடாத்தப்பபட்டு வரும் மாவீரர் நாளில் கலந்துகொள்ளும் மக்கள் இதனை நன்கு உணர்ந்தவர்களாய், எதற்கும் தயங்காமல் குறித்த குழப்பவாதிகளுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவும் அவமானமாகவும் (மன்னிக்கவேண்டும் அவமானம் என்ற வார்த்தைக்கே அவமானமாக இருக்கிறது) முடிந்திருந்தது. சிறிதுகாலம் இனி என்ன செய்யலாம் எனக் காத்திருந்தவர்களாய், எந்த மாவீரர் நாளை கொச்சைப்படுத்தித் தகவல்களை வெளியிட்டனரோ இன்று அதே முறையில் மாவீரர் நாளை நடாத்த முன்வந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இது இவர்களின் கபட நோக்கத்தையும் எந்தவித கொள்கையும் இல்லாமல் செயற்படுவதையுமே உணர்த்திநிற்கின்றது.

எமது தேச விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த மாவீரப் புதல்வர்களின் நாளையே கூறுபோட முனைப்புக்காட்டுவது எக்காலத்திலும் மன்னிக்கமுடியாத குற்றமாகும். இவ்வாறானவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. புலம்பெயர்வாழ் எம் உறவுகளே! எதிரியானவன் எம் வாசல்வரை வந்துவிட்டான். இதனை உணர்ந்து செயற்படவேண்டியது எம் எல்லோரினதும் தலையாய கடமையாகும். நாம் சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணமிது, சிந்தியுங்கள், செயற்படுங்கள்!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு