மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டுகின்றார் மகிந்த

Sunday January 13, 2019

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இடங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் என தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் குற்றம்சாட்டியிருக்கின்றார். 

நேற்று (12) கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுகின்றார்.

பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தெளிவாக கூறினார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் பேதம் ஏற்படும் வகையில் செயற்பட கூடாது என்றும் கூறுகின்றார். 

இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவதன் மூலம் அவர் தனது அரசியலை முன்னெடுக்கின்றார். இது எந்தச் செயற்பாட்டுக்கும் உதவப்போவதில்லை. – என்றார் ஹலீம்.