மீன்களிடம் பேசும் ரோபோ!

Saturday November 11, 2017

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் மீன்களிடம் பேசும் ரோபோவை கண்டு பிடித்துள்ளது. ஜெனீவாவில் இயங்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளது.

இந்த ‘ரோபோ’ மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே உள்ளது. மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சூரிய ஒளி (சோலார்) மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன.

அவை மீன்களை போன்று அவற்றை நீந்த செய்யும் திறன் படைத்தவை. மேலும் அதில் உள்ள டிரான்ஸ் மீட்டர் நமக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும்.

இந்த ‘ரோபோ’ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி பேசும் திறன் படைத்தவை. அதன் மூலம் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் முடியும். இது கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைக்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

இது இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதை சுவிட்சர்லாந்தை சேர்ந்த எல்.எஸ்.ஆர்.ஓ. நிறுவன விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர்.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம் மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கு உதவும் வகையிலும் ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்து இதை கண்டு பிடித்தனர்.