முகம்மது அலி மகன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

சனி மார்ச் 11, 2017

முகம்மது அலியின் மகனான முகம்மது அலி ஜூனியர் மீண்டும் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முகமது அலி மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்று, அந்த துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தார். கடந்த 3-6-2016 அன்று மரணம் அடைந்த முகமது அலியின் மகளான லைலா அலியும் குத்துச் சண்டை வீராங்கனையாக பல மேடைகளை சந்தித்துள்ளார்.

மறைந்த முஹம்மது அலியின் இரண்டாம் மனைவி கலிலா கமாச்சோ அலி. தனது 17-வது வயதில் முஹம்மது அலியை திருமணம் செய்து கொண்ட இவர், பத்தாண்டுகளுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து, பிரிந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

மகன்களில் ஒருவரான முகமது அலி ஜூனியர்(47), அமெரிக்காவில் பிறந்தவராவார், பிலடெல்பியா பகுதியில் வசித்துவருகிறார். இந்த நிலையில், முகம்மது அலி ஜூனியர் மீண்டும் ஒருமுறை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை வாஷிங்டன் விமான நிலையத்திற்கு சென்ற முகம்மது அலி ஜூனியர் அங்குள்ள விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் அவரது அடையாளங்களை பரிசோதித்ததாகவும், அதன் பிறகே அவர் விமானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, புளோரிடா விமான நிலையத்தில் முகம்மது அலி ஜுனியர் இதுபோல தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.