மு.க.ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Saturday January 13, 2018

பா.ம.க. சாதனைகளை தி.மு.க. சாதனைகளாக சொந்தம் கொண்டாடுவதா? என மு.க.ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் அ.தி.மு.க. அரசு அதன் மூலம் சாதித்தது என்ன? என்று வினா எழுப்பியதுடன், எதிர்த்தரப்பில் எவரும் கேட்காத போதிலும், மத்திய அரசில் தி.மு.க. இருந்த போது சாதித்த திட்டங்கள் என்று கூறி ஒரு பட்டியலை படித்துள்ளார்.

அதில் இடம்பெற்றுள்ள சாதனைகளில் பெரும்பாலானவை பா.ம.க.வின் சாதனைகளாகும். பா.ம.க. படைத்த சாதனைகளை தி.மு.க. சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் கூறியது மிகவும் அப்பட்டமான, அருவறுக்கத்தக்க பொய்யாகும்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது ஆகியவை தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது படைக்கப்பட்ட சாதனை தான். ஆனால், தி.மு.க. படைத்த சாதனைகள் அல்ல, பா.ம.கவின் சாதனைகள் என்பதை நண்பர் ஸ்டாலின் வரலாற்றைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

பா.ம.க.வின் சாதனைகளை தி.மு.க. சொந்தம் கொண்டாடுவது இது முதல் முறையல்ல. ஒட்டுமொத்த இந்தியாவும் போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டத்தை எனது அமைச்சகம் தான் கொண்டு வந்தது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால், அந்தத் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக மிகப்பெரிய பொய்யைக் கூறி விளம்பரம் தேட தி.மு.க. முயன்றது கடந்த கால வரலாறாகும்.

எந்த ஒரு கட்சிக்கும் சுயம் தேவை. தங்களின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமை கொள்வதில் தவறில்லை. மாறாக அடுத்தக் கட்சியின் சாதனைகளை தங்களின் சாதனைகளாக பட்டியலிடுவது சாதனைத் திருட்டாகவே பார்க்கப்படும். கடந்த காலங்களில் பா.ம.க அறிக்கை மற்றும் தேர்தல் அறிக்கைகளை காப்பியடித்த தி.மு.க., இப்போது பா.ம.கவின் சாதனைகளைக் காப்பியடித்திருக்கிறது. இனியாவது மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை செய்யவும், அவ்வாறு செய்த நன்மைகளை மட்டும் தி.மு.க.வின் சாதனைகளாக பட்டியலிடவும் நண்பர் ஸ்டாலின் முயல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.