முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் எச்சரிக்கை

ஞாயிறு சனவரி 13, 2019

யாழ். மாநகர சபை எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும், மீற்றர் பொருத்தாத ஓட்டோக்களுக்கு தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை  நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட ஓட்டோ - மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாநகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஓட்டோக்களுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்நடைமுறை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. 

யாழ்.மாவட்ட ஓட்டோ - மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் கீழ் பதிவுகளைக் கொண்டுள்ள மாநகர எல்லைக்குட்பட்ட ஓட்டோக்களில் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு, எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள். 

2019.02.01 இலிருந்து கட்டாயமாக மீற்றர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, அவ்வாறு மீற்றர் பொருத்தாத மாநகர எல்லைக்குட்பட்ட ஓட்டோ உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு தரிப்பிடம் மீளப்பெறப்படும். – என்றார்.