முதன் முறையாக ரோபோ மூலம் தண்டு வட சத்திரசிகிட்சை!

திங்கள் மே 07, 2018

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழுவினர் முதன் முறையாக ரோபோ மூலம் தண்டுவட சத்திரசிகிட்சை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.

‘கார்டோமோ’ எனப்படும் குறுத்தெலும்பு கட்டி புற்று நோய் கழுத்தில் மண்டை ஓடும், தண்டுவடமும் சேரும் இடத்தில் உருவாகிறது. இது மெதுவாக வளர்ந்து பல ஆண்டுகள் கழித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், இது 10 லட்சத்தில் ஒருவருக்கு அபூர்வமாக ஏற்படும்.

இத்தகைய நோய் பாதித்த ஒருவருக்கு ‘ரோபோ’வை பயன்படுத்தி புற்று நோய் கட்டியை அகற்றி சத்திரசிகிட்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த அரிய சாதனை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழுவினர் இந்த சத்திரசிகிட்சை வெற்றிகரமாக நடத்தினார்கள். இதன் மூலம் தண்டுவடத்தில் முதன் முறையாக ‘ரோபோ’ உதவியுடன் சத்திரசிகிட்சை நடத்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இத்தகைய சத்திரசிகிட்சை மிகவும் ஆபத்தானது. சத்திரசிகிட்சையின்  போது எலும்பும், தசையும் உடைந்து விட்டால் நுகரும் தன்மை பாதிக்கப்படும். பக்கவாதம் தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, மிகவும் கவனமாக ‘ரோபோ’ கையாளப்பட்டது. தற்போது நோயாளி பூரணமாககுணமடைந்து விட்டார். அவர் தன் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.