முன்பள்ளி மாணவர்களை வகுப்பு அறைக்குள் வைத்து பூட்டிய ஈ.பி.டி.பி ஆசிரியர்!

புதன் மே 16, 2018

யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

 இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த குறித்த முன்பள்ளியில் மாணவர்கள் கற்று கொண்டு இருந்த நேரம் திடீரென ஆசிரியை மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.

 தனித்து மாணவர்கள் மூடப்பட்ட முன் பள்ளிக்குள் இருந்த போது அச்சம் காரணமாக மாணவர்கள் அவல குரல் எழுப்பி அழுத்துள்ளனர்.  அதனை அவதானித்த அயலவர்கள் முன் பள்ளி ஆசிரியையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்ததுடன் மாணவர்களை மீட்கும் முகமாக ஆசிரியை தேடி சென்றுள்ளனர்.

 அந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அயலவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து குறித்த முன் பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டதுடன் , விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

அதன் போது குறித்த முன் பள்ளி இயங்கும் ஞான ஒளி சனசமூக நிலையம் நீண்ட காலமாக நிர்வாக தெரிவுகள் இடம்பெறாமல் வினைத்திறனின்றி இயங்கி வருவதாக அயலவர்கள் தெரிவித்தமையை அடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக முன் பள்ளியை மூடுமாறு பணித்துள்ளனர்.

 குறித்த முன் பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.