முருகன் வேலூர் நீதிமன்றில் ஆஜர்!

April 21, 2017

ஜெயில் அறையில் கைபேசி கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக வேலூர் நீதிமன்றில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் காவி உடையில் சாமியார் போல வந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 25-ந் திகதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஜெயில் காவலர்கள் திடீரென சோதனை நடத்தி 2 கைபேசிகளை கைப்பற்றினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் காவல் துறை   வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய காவல் துறை  காவலுடன் முருகன் நீதிமன்றிற்கு  அழைத்து வரப்பட்டார்.

முருகன் ஜெயிலில் சாமியார் போல் இருப்பதாகவும், அடிக்கடிமௌன  விரதம் இருப்பதாகவும், தகவல்கள் வந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று நீதிமன்றில்  ஆஜராக வந்த முருகன் காவி வேட்டி, துண்டு அணிந்தபடி வந்தார். குடுமியும், நீண்ட தாடியும் வளர்த்திருந்தார். நெற்றியில் நாமம் போட்டு இருந்தார்.

மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ந் திகதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார். அப்போது மாஜிஸ்திரேட்டிடம் முருகன் கூறுகையில், ‘என் தாயார் சோமணி வெற்றிவேல் இலங்கையில் இருந்து என்னை பார்ப்பதற்காக வேலூர் வந்துள்ளார்.

 அவர், 2 முறை என்னை பார்க்க ஜெயிலுக்கு வந்தும், அவரால் என்னை சந்திக்க முடியவில்லை. எனவே, அடுத்த வாய்தாவின் போது என்னை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தாமல் நீதிமன்றில்  ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். அப்படி உத்தரவிட்டால் என் தாயார் என்னை நேரில் பார்த்துவிட்டு செல்வார்’ என்றார்.

பின்னர் நீதிமன்றில்   இருந்து வெளியே வந்த முருகனிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் நிருபர்களை பார்த்து கைகூப்பி கும்பிடுவது போல் பாவனை காட்டியவாறு சென்றார்.

இதையடுத்து முருகன் மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்ட பிறகு நேற்றுத்தான் முருகன்  நீதி மன்றில்  ஆஜர்படுத்தப்பட்டார்  என்பது குறிப் பிடத்தக்கது.

செய்திகள்