முல்லை. கொக்கிளாயில் சிங்கள மீனவர்கள் அட்டகாசம், தமிழர்களைத் தாக்க முயற்சி

April 19, 2017

முல்லைத்தீவு – கொக்கிளாய் பகுதியில் அத்துமீறித் தங்கியிருந்து, தமிழ் மீனவர்களின் பாடுகளில் தொழில் செய்துவருகின்ற சிங்கள மீனவர்கள் நேற்று தமிழ் மீனவர்களையும் தமிழ் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக அச்சுறுத்தியதுடன் அவர்களைத் தாக்கவும் முற்பட்டனர். 

கொக்கிளாய் பிரதேசம் சிங்கள மீனவர்களின் இடம் என்று தெரிவித்த அவர்கள் அங்கு தமிழ் மீனவர்கள் தொழில் செய்ய முடியாது எனவும் மீறி தொழில் செய்தால் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். 

நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தமிழ் மீனவர்கள் தொழில் செய்யும் கரைவலைப்பாடுகளை அளவீடு செய்யும் நடவடிக்கையின்போதே இந்த களேபரங்கள் இடம்பெற்றன. 

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மீனவர்கள் பரம்பரை பரம்பரையாகத் கரைவலைத் தொழில் செய்த கடலில் தற்போது சிங்கள மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். 

தென்னிலங்கையில் உள்ள அரச அதிகாரிகளினதும் கடற்படையினரதும் ஆதரவோடு அங்கு தங்கியிருந்து தொழில் செய்யும் அவர்கள் தமிழ் மீனவர்களைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழ் மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் இறங்குதுறை ஒன்றை அமைப்பதற்கு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீலை மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது சிங்கள மீனவர்கள் கடும் எதிர்ப்புக் காட்டியதால் அது கைவிடப்பட்டது. 

இதனையடுத்து, தமிழ் மீனவர்களுக்கு எதிராக சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அடுத்த விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், தமிழ் மீனவர்களின் கரைவலைப்பாடுகளை அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. அதற்கு ஏற்ப பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கொக்கிளாய் கிராம சேவையாளர், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள், அளவீட்டு திணைக்கள உத்தியோகத்தர்கள் என்போர் நேற்று அளவீடுகளில் ஈடுபட்டனர். 

இதன்போதே சிங்கள மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு வந்திருந்த தமிழ் அதிகாரிகளையும் தமிழ் மீனவர்களையும் அவர்கள் தாக்க முற்பட்டனர். அத்துடன், அந்த அதிகாரிகளையும் மீனவர்களையும் கடும் வார்தைப் பிரயோகங்களால் ஏசினர். 

நீதிமன்றம் அளவீடு செய்யப் பணித்த காணிகளை விட வேறு காணிகளை அளவீடு செய்ய முயன்றனர். இதனால் தமிழ் அதிகாரிகளும் கிராம சேவையாளரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். 

தாங்கள் தடுக்கப்பட்டமை, தாக்க முற்பட்டமை தொடர்பாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் தமிழ் அதிகாரிகள் தெரிவித்தனர். 
சிங்கள மீனவர்களின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மீனவர்களும் அதிகாரிகளும் கடும்  அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

இணைப்பு: 
செய்திகள்