முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனவழிப்பு – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன்

வியாழன் மே 12, 2016

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்று பிரித்தானியாவின் முதன்மை எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 10.05.2016 செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடலின் முதலாவது அமர்வின் நிறைவில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:

‘நான் உண்மையாகவே நம்புகின்றேன் தமிழர் விவகாரம் தொடர்பாக கடந்த பல வருடங்களில் எமது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களில் இதுதான் காத்திரமானதாக இருக்கின்றது.

2009ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது, என்ன நடக்கவில்லை என்பது பற்றிப் பல கூட்டங்களில் - தமிழர்களின் மத்தியிலும், இந்த அவையிலும் - நாம் நிறையப் பேசியிருக்கிறோம்.

இவ்வாறான சாட்சியமளிப்புக்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இன்றைய நிகழ்வு மூலம் இன்றிரவு நான் புரிந்து கொண்டுள்ளேன்.

இவ்வாறான இனவழிப்புக்களும், அவலங்களும் நடைபெறும் பொழுது... இதனை இனவழிப்பு என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது இனவழிப்பு என்று நான் நினைக்கின்றேன். இதனை இனவழிப்பு என்றே அழைக்கிறேன்.

இவ்வாறானவை நடைபெறக்கூடாது என்று நாம் கூறுவோம். ஆனால் சில வருடங்களில் இவை மீண்டும் நடைபெறும். இவை ஏன் இவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன?

நீதி வழங்கப்படாது போனால், பொறுப்புக்கூறல் சாத்தியமாகாது போனால், போர்க்குற்றங்கள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவசியமான இவ்வாறான சாட்சியங்களை நாம் செவிமடுக்காது போனால், இதற்காக என்ன விலை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணராது போனால், நீதியும், பொறுப்புக்கூறலும் நிகழாது போனால், நிரந்தர சமாதானம் ஏற்படாது.

இதன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூறியிருப்பதை சிறீலங்கா செயற்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

ராஜபக்சவோடு ஒப்பிடும் பொழுது, சிறீசேன பரவாயில்லை என்பது உண்மைதான். ஆனால் ஐ.நாவைப் பார்த்து பன்னாட்டுத் தலையீட்டிற்கு இடமளிக்க முடியாது என்று அவர் கூற முடியாது. ஆம். நிச்சயமாக பன்னாட்டுத் தலையீடு இருக்கும். அது தான் அடித்துக் கூறப்படுகின்றது. அதுதான் நடக்க வேண்டும். உண்மையான பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டுமாயின் சுயாதீனமான அம்சம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் நடக்க வேண்டும்.

இங்கு உரையாற்றிய பல பேச்சாளர்கள் குறிப்பிட்டார்கள் எமது போராட்டம் தொடரும் என்று. 2009ஆம் ஆண்டு நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் உலகம் மிகவும் தாமதம் காட்டியது என்பது உண்மையே. நாம் எல்லோருமே – தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக் குழு - கடும் முயற்சி எடுத்தோம். வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலபாண்ட் சிறீலங்கா சென்றார். ஆனால் காலம் கடந்திருந்தது. அங்கு நடைபெறுவதை வெளிப்படுத்தி போர்நிறுத்தத்தை வலியுறுத்திய முதல் உலகத் தலைவராக கோர்டன் பிறவுண் திகழ்ந்தார். ஆனால் காலம் கடந்திருந்தது. இப்பொழுது எம் எல்லோருக்கும் ஒரு பொறுப்பு உண்டு: அங்கு நடைபெற்றது வெறும் துன்பியல் நிகழ்வாக அமையக் கூடாது. அங்கு விலைகொடுக்கப்பட்ட தியாகங்கள் நினைவுகூரப்பட வேண்டும். சமாதானம் - உண்மையான சமாதானம் - சிறீலங்காவில் சாத்தியமாக வேண்டும்.

சில வேளைகளில் விட்டுக் கொடுப்புக்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி எனது உரையை நான் நிறைவு செய்ய முற்படும் அதே வேளை நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளை அடிக்கடி நினைவுகூருவதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

அரசியல் என்பது சாத்தியமானவர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டிய கலை என்பார்கள் பலர். ஆனால் நெல்சன் மண்டேலா கூறினார், அரசியல் என்பது சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதாகும் என்று. இதைத் தான் நாம் செய்ய வேண்டும் என்பதை நாம் மறக்கக்கூடாது. சில வேளைகளில் ஒத்த கருத்தைப் பெற்று முன்னகர்வதற்காக நாம் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்வோம். அதே நேரத்தில் எது சரி என்பது பற்றியும், எது நீதியைப் பிரதிபலிக்கும் என்பது பற்றியும், எது மக்களுக்கு அர்த்தமுள்ளதாக அமையும் என்பது பற்றியும், எது உண்மையான சமாதானத்தின் விதையாகவும், தமிழர்களின் மேம்பாட்டிற்கு வழிகோலுவதாகவும் அமையும் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

சிறீலங்காவில் நடைபெறுவதை நான் இங்கு விபரிக்கத் தேவையில்லை. எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கு நடந்ததைக் கண்டவர்களும், அதற்காக பெரும் விலை கொடுத்தவர்களும் இங்கு கூறியதைக் கேட்டிருந்தீர்கள்.

அதேநேரத்தில் நாம் இதுவிடயத்தில் வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு பற்றுறுதி காட்ட வேண்டும். இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். உலகம் இதனை மறக்காது இருப்பதற்கு நாம் சகல முயற்சியும் எடுக்க வேண்டும். இதனை நாம் மறப்போமாக இருந்தால் அடுத்த அவலத்திற்கு வித்திடுபவர்களாக நாம் இருப்போம் என்பதை மறக்கக்கூடாது.