முள்ளிவாய்க்காலில் படையினர் கையாண்ட புதிய யுக்தி!

வெள்ளி ஜூன் 01, 2018

தாங்கள் பீனிக்ஸ் பறவைகள் என்பதை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சிங்கள தேசத்திற்கு நிரூபித்திருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழரின் மீள் எழுகை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில், தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தன்னெழுச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எந்த அதிகார வர்க்கத்தாலும் எங்களை அடிபணியவைக்க முடியாது என்பதை மே-18 ஆம் திகதி தமிழ் மக்கள் சிங்கள தேசத்திற்குச் சொல்லியிருக்கின்றனர்.

எங்களைச் சுட்டெரித்தாலும் சுதந்திரம் ஒன்றே எமது உரிமை என்பதை, இரத்த ஆறு ஓடிய அந்த மண்ணில் நின்று அவர்கள் உரத்துக் கூறியிருக்கின்றனர். எமது உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் கிளர்ந்தெழ வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் சர்வதேசத்திற்கு இடித்துரைத்திருக்கின்றனர்.

சரியா, பிழையா என்ற விவாதங்கள், தவறா, தப்பா என்ற விமர்சனங்களுக்கு அப்பால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்று முடிந்துள்ளது. தாயகத்தில் மட்டுமன்றி, இப்பூமிப்பந்தில் தமிழர் வாழுத் தேசம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

தாயகத்திலே, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இறுதி யுத்தத்தின்போது அந்த மண்ணில் இரத்தம் சிந்திய தமிழர்கள் ஒன்பது ஆண்டுகள் கழிந்த பின்னர் அங்கு கண்ணீர் சிந்தினர். அவர்கள் அனைவரும் ஆக்ரோசமாகக் காணப்பட்டனர். உணர்ச்சிக் கொந்தளிப்பில் நின்றனர்.

யுத்தத்தின்போது இழப்புக்கள் என்பது தவிர்க்கப்பட முடியாதவை. சில உயிர்கள் மடிவது மரபுதான். ஆனால், இங்கே எமது தேசத்தில் அது முற்றிலும் வித்தியாசமாகவே நடைபெற்றது. இறந்தவர்களை விடவும் எஞ்சியவர்கள் குறைவு என்ற அடிப்படையில் இந்த யுத்தம் எமது மக்களைக் கொன்று தின்றிருக்கின்றது. இறுதி யுத்தம் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றது.

சிங்கள தேசம் தமிழர்களுக்கு எந்தளவிற்கு அநீதி இழைக்க முடியுமோ அந்தளவிற்கு இழைத்திருக்கின்றது. அநீதிகளைக் கண்டு தாம் அடங்கமாட்டார்கள் என்பதை தமிழர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தியே வந்திருக்கின்றனர். அதைப் போலவே இப்போதும் நடைபெற்றிருக்கின்றது.

இந்த வருடம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடந்த வருடங்களைப் போல அன்றி மிகவும் வித்தியாசமாக இருந்தது. புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களே தாயகத்திலுள்ள தமிழ் இளையோரை மெச்சினர். அந்தளவிற்கு மிகத் துணிவுடன் நினைவேந்தல் இடம்பெற்றது.

எனினும், சிங்கள தேசம் தமிழ் மக்களை ஆற்றுப்படுத்த முனைந்ததை இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவதானிக்க முடிந்தது. ஏனெனில், கடந்த வருடங்களைப் போல இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுவான எதிர்ப்பு இருக்கவில்லை. மாறாக சிங்கள தேசத்தில் இருந்து ஆதரவுக் குரல்கள் மேலெழுந்ததைக் காண முடிந்தது.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல, முள்ளிவாய்க்கால் நினைவு அனுட்டிக்கச் சென்று திரும்பிய மக்களுக்கு சிங்களப் படைகள் குளிர்பானம் வழங்கியிருந்தன. யாழ். மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர். பேருந்துகளில் சென்றவர்களை விடவும் மோட்டார் சைக்கிள் பவனியாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்றனர்.

இவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முடித்துவிட்டு யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஆனையிறவில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து முகாம் அமைத்திருக்கும் படையினர் தமது படை முகாமில் வைத்து குளிர்பானம் வழங்கினர். இராணுவ முகாமினுள் தயார் செய்யப்பட்ட குளிர்பானத்தை கொண்டுவந்து வீதியால் வந்தவர்களை மறித்துக் கொடுத்தனர்.

அரசாங்கமும் படையினரும் ஏன் இப்படிச் செய்தார்கள்? கடந்த வருடங்களில் இறுக்கமான தடைகள் போடப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு இந்த வருடம் இவ்வளவு நெகிழ்ச்சியுடன் கடைப்பிடிக்கப்பட அனுமதிக்கப்பட்டது ஏன்? அதுவும் படையினர் குளிர்பானம் வழங்கியது ஏன்? இந்த வினாக்களுக்கு விடைகள் இல்லாமல் இல்லை. எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் யுத்தத்தின்போது சிறீலங்கா படைகள் இழைத்த போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக் கோரிக்கை இதுவரை கைவிடப்படவில்லை. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறுகின்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளைச் சமாளிப்பதற்கு சிறீலங்கா அரசு பெரும் பிரயத்தனங்களில் ஈடுபடவேண்டி உள்ளது. அதிலும் வருடாந்தம் சிறீலங்கா அரசுக்கான அழுத்தம் அதிகரிக்கின்றதே தவிர குறையும் சாத்தியப்பாட்டைக் காணமுடியவில்லை. இவ்வாறான நிலையில், தாங்கள் தமிழ் மக்களுடன் நட்புரிமையுடன் பழகுகின்றனர் என்ற தோற்றப்பாட்டைக் காட்டவேண்டிய தேவை சிறீலங்கா அரசுக்கும் படைத்தரப்புக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே, படையினர் இம்முறை புதிய உத்தியைக் கையாண்டிருக்கின்றனர்.

அதுவும் தங்களால் கொல்லப்பட்டவர்கள் எனக் கூறப்படும் மக்களின் நினைவேந்தலுக்குச் சென்றவர்களுக்கே குளிர்பானம் வழங்குவது என்பது தங்கள் மீதான களங்கத்தைக் குறைக்கும் என அவர்கள் எண்ணினர். அதன் வெளிப்பாடாகவே குளிர்பானம் வழங்கப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது படையினர் ஒரு சில குழந்தைகளையும் வயோதிபர்களையும் தூக்கிச் சென்ற காட்சி அடங்கிய நிழற்படங்கள் இன்றுவரை படையினருக்கு ஆதரவான பிரச்சாரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இலட்சக்கணக்கான மக்களை ஈவிரக்கம் இன்றிக் கொன்றொழித்த படையினர், நிழற்படத்திற்காக மட்டும் ஒருசிலரை தூக்கிச் சென்ற காட்சியை சர்வதேசம் வாய்பிளந்து பார்க்கின்றது. அதேபோலவே, குளிர்பானம் வழங்கி சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெற படைத்தரப்பு முயன்றிருக்கின்றது.

எது எப்படி இருந்தபோதிலும், சிறீலங்காவில் உள்ள ஒட்டுமொத்தப் படையினரும் போர்க்குற்றவாளிகள்தாம். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்காக உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்கள்தான் குரல்கொடுக்க வேண்டும். உலகில் வேறெந்த இனத்தின் மீதும் இனவாதத் தாக்குதல் நடத்தப்படுமாயின் கேட்பதற்கு அவர்களுக்கான நாடுகள் இருக்கின்றன. ஆனால், தமிழன் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் உலகில் எந்தவொரு நாடும் கேட்காது. ஏனெனில், உலகில் தமிழனுக்கு என்றொரு நாடில்லை.

இந்தக் குறையைப் போக்கவே நானிலம் போற்றும் தலைவன் எழுந்தான். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த உன்னத தலைவனுக்குப் பின்புலமாக நின்றிருந்தால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும். தமிழினம் விட்ட சில தவறுகளால் இன்று ஏதிலிகளாக நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனினும், அன்று நாம் விட்ட தவறுகளை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களும் உரத்துக் குரல் கொடுத்தால் எங்கள் குரலுக்கு சர்வதேசம் காதுகொடுக்கும். தேசியத் தலைவர் கூறியதைப் போன்று, எழுச்சியடைந்த எந்தவொரு இனமும் வீழ்ச்சி அடைந்ததாக வரலாறு இல்லை என்பதைப் போல தமிழினம் இனியாவது ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழர் நலன்பேணும் அமைப்புக்கள், தமிழீழ விடுதலையின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கின்ற அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விட்டுக்கொடுப்புக்கள் அவசியம். எழுச்சியின் மூலமே, மக்களின் ஒன்றிணைந்த புரட்சியின் மூலமே எமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு