முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், பயங்கரவாத பிரிவு தற்போதே விசாரணையை ஆரம்பித்துள்ளது.

April 21, 2017

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட போட்டி குறித்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அக்கினிச் சிறகுகள் அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உதைபந்தாட்ட போட்டி ஒன்று நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த போட்டியில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்குபற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அக்கினி சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவர் வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையில் குறித்த உதைபந்தாட்ட போட்டி நடாத்துவதற்கு யாரால் பணம் வழங்கப்பட்டது?

புலம்பெயர் தமிழர்கள் பின்னணியில் உள்ளார்களா? என்பது தொடர்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அன்று குறித்த விளையாட்டுக்கழகம் நினைவுச்சுடர் ஏற்றுவார்களா? என்பவை தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக ஆனந்தவர்மன் எம்மிடம் தெரிவித்துள்ளார். இதே போன்று கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொருளாளர் வவுனியா யோசப் முகாமில் உள்ள இராணுவத்தினரால் தொலைபேசி மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் தரப்படவில்லை அன்பளிப்புக்கள் மூலமே பணத்தை திரட்டி இந்த போட்டியை ஒழுங்கு செய்துள்ளோம் என அவர்களுக்கு தெளிவு படுத்தியதனை அடுத்தே போட்டியை தொடர்ந்து நடாத்துவதற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்  அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகள்