முள்ளிவாய்க்கால் முடிவல்ல...

வியாழன் மே 18, 2017

மே 18, சிங்கள அரச பயங்கரவாதம் கட்டற்று உலக வல்லாதிக்க அரசுகளின் துணைகொண்டு தமிழீழ மக்களைக் கொன்றுகுவித்த கறுப்பு நாள். நாள்தோறும் வலிசுமந்தே பழகிய ஈழத்தமிழர்களை நாடியடக்கி அவர்தம் இருப்பையே பறிப்போமென சிங்களம் எண்ணிய நாள்.  

இந்நாளில் தம்மின்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்களையும் மனதில் ஏற்றி நினைவுகூரும் அதேவேளை உடல், உள உபாதைகளுக்குள்ளான உறவுகளும், காணாமல் போனோரென ஆக்கப்பட்டு தடுப்புகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் உறவுகளும், சொந்தநிலத்தை பறிகொடுத்து நாதியற்று சொல்லொணாத் துயரங்களை எதிர்கொள்ளும் மக்களுமே எங்கள் உயிர்மூச்சு என்பதையும் உரக்கச் சொல்ல விரும்புகிறோம். 

சிங்கள அரசு 2009இல் எம் மூச்சை அடக்கியதாகக் கொக்கரிக்கிறது. தாம் யாது செய்யினும் கேட்பார் யாரும் இல்லை என்றும் எண்ணுகிறது. எம் உறவுகளே, இது நாம் ஒன்றாய் முழு வீச்சோடு செயற்படவேண்டிய நேரம். எம் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான வரிகளே எமக்கு வழிகாட்டி.  

‘‘தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்" –தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் (மாவீரர் நாள் உரை, 2008).

போராட்ட வடிவங்களை மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் என்றுமே மாறாது என்பார் தேசியத் தலைவர் அவர்கள். அதற்கிணங்க முதலில் மாணவர் எழுச்சியாக அமைதி வழியில் ஆரம்பித்த விடுதலை வேட்கை, காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஆயுதம்தரிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட பொழுது கொரில்லா முறையினூடும் பின் உலக வல்லரசுகளே வியக்கும் வகையில் முறையான பலமிக்க இராணுவக் கட்டமைப்பாய் வளர்ச்சி பெற்றது.

ஆயுதபலத்தின் உச்சத்தில் இருக்கும்போதே சமாதானத்தின் மீதான தனது பற்றுறுதியைத் தமிழீழ தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். அந்த வகையில் எமது தேச சுதந்திர இயக்கம் பற்றுறுதியோடும், இதய சுத்தியோடும் சமாதான பேச்சுகளில் ஈடுபட்டிருந்தாலும் உலக சமூகம் எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாதிகளாகவே பார்த்தது. அதைமாற்றி அந்நாடுகளுடன் நட்புறவை பாராட்டும் வகையில் அதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடுவதற்கான முயற்சிகளில் தலைவர் ஈடுபட்டார்.  

இன்று, எம் விடுதலைக்காக தம்முயிரையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் மற்றும் பொதுமக்களை எண்ணி வெறுமனே ஒப்பாரிவைத்துக் கொண்டிருப்பதில் பலனில்லை. இத்தருணத்தில் அவர்தம் நினைவால் ஒன்றாய் இணைந்திருக்கும் நாம் அவர்களின் விடுதலைப் பயணத்தைத் தொடரவேண்டும்.


ஒரு தொய்வுநிலையில் தமிழர் தரப்பு இருப்பதாய் சிங்கள அரசு தமிழர்க்கு காண்பித்து, அதனை தனக்கு ஏதுவாக பாவித்து எமது நியாயமான கோரிக்கைகளை மூடிமறைக்க எத்தனிக்கின்றது. உலகநாடுகளில் பரந்துவாழும் தமிழினம், அவர்தம் நாட்டு அரசுகளின் கதவுகளை பலமாய் தட்டவேண்டும். தமிழீழத்தில் எமக்கு இன்னும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள், தொடரும் நீதி மறைப்பு மற்றும் மறுப்புகள் காரணமாய் தொடரும் போராட்டங்கள் பற்றி தெளிவுபடுத்துதல் அவசியம். இதை மிகவேகமாகவும் விவேகத்துடனும் செய்தல் காலத்தின் கட்டாயம்.


வலிகளையும் துரோகங்களையும் காலங்காலமாக சுமந்து பழகிய நாம், இன்றையநாளில் ஒன்றாய், ஒரு தேசமாக எழுச்சி கொள்வோம். மே 18 முடிவல்ல - முடிவெல்ல நாம் கொண்ட இடைப்புள்ளி. 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி 
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்