முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

புதன் மார்ச் 14, 2018

சிறிலங்காவில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று (13) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களை மீண்டுமொரு இனவாத யுத்தத்துக்குள் தள்ளும் முயற்சியாகவே தற்போதைய  இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன. 

எமது வாழ்வை அழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.