மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

April 13, 2017

ஜப்பான் மற்றும் சிறீலங்காவிற்கும்  இடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன.  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கைகளில் கையொப்பமிடப்பட்டுள்ளன. 

கிராமப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம், களுகங்கை நீர் விநியோகத்தை விரிவுபடுத்தல் மற்றும் துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல் போன்று மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன. 

இதேவேளை இலங்கையில் தேசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

சிறீலங்காவின்  துறைமுகம், போக்குவரத்து, அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய தேசிய தரத்திலான அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். 

ஜப்பான் பிரதமர் மற்றும் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து ஜப்பானின் பிரதமர் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். 

சிறீலங்கா துறைமுகத்தின் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறீலங்கா கடற்படையின் கீழ் இருப்பதாகவும், வேறு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு சிறீலங்கா துறைமுகங்களை பயன்படுத்துவதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று சிறீலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

செய்திகள்