மூன்றெழுத்தில் ஒரு கவிதை ‘அம்மா’ - மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’

ஞாயிறு ஜூன் 17, 2018

சேயைத் தாயாய்ப் பார்க்கும் அற்புதம் அப்பா. ஆண் பெண்ணிற்கான பாலுணர்வு காதலை வியந்த காவியங்கள் பல உண்டு. ஆண் பெண்ணின் பாசத்திற்கான காதல் காவியங்களே வியக்கும் காதல், பெண்ணைப் பெற்ற தந்தைக்கு மட்டுமே உரித்தானது. அன்பும், அரணும், அரவணைப்பும் சங்கமித்த தந்தையைப் பெற்ற மகளுக்கு உரித்தானது.

குழந்தையாய் இருந்தபோது நடுக்கத்துடன் கையில் ஏந்திய கடவுள், பேதையாய் (5-7) இருந்த போது கண்களில் தெரிந்த உயிருள்ள பொம்மை, பெதும்பை (8-11) வயதில் செய்த செய்கைகளையெல்லாம் கைதட்டி ரசித்த ரசிகன், மங்கைப் (12 -13) பருவத்தில் புதிராய் எழும் கேள்விகளுக்கு புதிதாய் விடை தேடித்தருபவர். மடந்தைப் (14 -19) பருவம் எட்டியதும் நிழலாய் காவல் செய்யும் காவல்காரன்.

அரிவை (20- 25) வயதில் அறிந்ததெல்லாம் கண்களில் மகளைப் பற்றிய கனவுகளுடன் வலம் வந்த கனவுகளின் நாயகன். தெரிவையில் (25- 31) தெரிந்து கொண்டதெல்லாம் என் இளம்வயது கைப்பொம்மை என் பிள்ளைகளின் கைகளில் இன்று தாத்தாவாய் பேரிளம் பெண்ணாய், (32- 40) தனக்குத் துணையாய் இருந்தவருக்குத் தான் துணையாய், ஒரு கட்டத்தில் அற்புத மனிதரின் நினைவுகள் மட்டும் வாழ்நாள் முழுவதும் துணையாய், பெண்ணின் ஏழு பருவத்தில் ஏழு அவதாரங்களாய் வாழ்ந்து காட்டிய உறவின் அற்புதம் அப்பா.

சேயைத் தாயாய் பார்க்கும் உறவு. தாரம் பலமுறை பார்த்துப் பார்த்து சரியாய்ச் செய்த உணவில் தெரியாத சுவை, மகள் பழகுவதற்காக செய்த உணவில் தெரியும். தந்தைக்கு மனைவி சொன்ன வார்த்தைகள் வேண்டுமானால் கைவிலங்காக இருக்கலாம். மகளின் வார்த்தைகளெல்லாம் பூ விலங்காகும். பிறருக்காகச் செலவு செய்த போது காலியாக இருந்த சட்டைப்பை கனமாக இருந்தது, மகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொழுது உழைப்புக்குக் கிடைத்த பலனைக் கூட, மகளின் வருகை தந்த பலனாகத் தான் எண்ணுவார்.

நிமிடங்கள் எல்லாம் வருடங்களாகும் காதலிக்கும் போது மட்டும்தான், மகளின் வருகைக்காகக் காத்திருக்கும், தந்தைக்குக் காலமெல்லாம் அதே உணர்வு தான், ஆடைகளை வாங்கும் பொழுது சட்டைப்பை காலியாகலாம், ஆனால் மனது நிரம்பிவிடும் மகளை அந்த உடையில் காணும்பொழுது.

மகளின் சின்ன சின்ன அசைவுகள் கூட நாட்டியத்தின் உச்சம் தான் மகளை பட்டுப் பாவாடையில் காணும் பொழுது, தந்தையின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் மீனாட்சியின் உருவம்தான். பருவம் அடைந்த பின்னும் மகளின் வயது தெரிவதில்லை தந்தைக்கு, ரசிக்கத் தெரியாதவனும் ரசிகனாவான், பெண்ணுக்குத் தந்தையானாள்.
 
மகளுக்காக அலையும் பொழுது மட்டும் வண்டியின் சக்கரம் தேயாது, கால்களும் ஓயாது, சிறு பாசியும் அழகாய் தோன்றும், மகளின் கழுத்துக்கு அணிகலனால். சூரியனைக் கண்டால் மட்டும் மலர்போல் எந்நேரமும் மகளுக்காக அகம் குளிர காவல் செய்யும் சேவகன் அப்பா. தன் மகள் என் மீது விழும் சிறு தவறான கண்ணோட்டம் கூட மனதிற்குள் கோபத் தணலை உந்தும் எத்தனைப் பொறுமைசாலிக்கும்.

மனைவியின் மசக்கையைக் கண்டு கொள்ளாதவர்கள் கூட மகளின் மசக்கையில் கண்சிமிட்டாமல் காவல் காப்பார். தந்தையில் இருந்து தாத்தாவுக்கு அதிகரிப்பது வயது மட்டுமல்லாமல் பல மடங்கு பாசமும் தான். தந்தையென்ற உறவு சரியாக அமைந்தால் நம் தலையெழுத்து மாறும்.