மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்!

Thursday February 22, 2018

எம்முடைய சில பழக்கங்கள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா. அவற்றினை இப்பொழுது அறிவோம்.

சராசரியாக ஒரு மனிதனின் மூளை 1.3-1.4 கி இருக்கின்றது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் மூளை மிக அவசியம் ஆகின்றது. ஹார்மோன்கள் சீராய் இயங்க, மூச்சு, இதயதுடிப்பு, சதைகளின் கட்டுப்பாடு, கை, கால் இயக்க ஒத்துழைப்பு, ஆழ்ந்து சிந்திக்க, உணர்ச்சிகள் என பல்வேறு செயல்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

ஆக இத்தனை வேலைகளையும் செய்ய மூளைக்கு அதிக சக்தி தேவைதானே. நமது உடலுக்குத் தேவைப்படும் சக்தியில் 20 சதவீதம் சக்தியினை மூளை எடுத்துக் கொள்கின்றது. இது வயது போன்ற பல காரணங்களைக் கொண்டு சற்று மாறுபடலாம். மூளை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றுதானே அனைவரும் விரும்புவர். நம்முடைய சில பழக்கங்கள், பாதிப்புகள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா. அவற்றினை இப்பொழுது அறிவோம். 

மூளையின் செயல்பாட்டிற்கு ஏதாவது ஒரு வேலை தூண்டு கோலாக நமக்கு இருக்க வேண்டும். பிசியாக இருத்தல், யோசனை, வேலை செய்தல், சுற்று வட்டாரத்தில் நடப்பது பற்றி அறிதல், அதனைப் பற்றிய கருத்து, இப்படி ஏதாவது வேலை மூளைக்கு இருக்க வேண்டும். செஸ் விளையாடுபவர்கள், கணிதம் போடுபவர்கள், விதம் விதமாய் கோலம் போடுபவர்கள், இப்படி இருப்பவர்களுக்கு மூளை சிறப்பாய் செயல்படுவதாய் கூறுவர். 

புதிதாய் பார்ப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது இவை அனைத்தும் மூளையால் முடியும். ஆனால் அதற்கு உடல் சுறுசுறுப்பும், மன சுறுசுறுப்பும் தேவை. அதை விட்டு எதிலும் அக்கறை காட்டாது, எந்த வேலையும் இல்லாது, எந்த பொறுப்பும் இல்லாது, வெறுமனே அமர்ந்த படி சுரத்தில்லாத வாழ்க்கை மேற்கொண்டால் மூளை சுருங்கி விடும். ஆகவேத்தான் எதுவும் செய்யாமல் உட்கார்ந்தே காலம் தள்ளுபவர்கள் காலப் போக்கில் எதனையும் சிந்தித்து செயல்பட முடியாதவர்களாக ஆகி விடுவார்கள். 

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

உங்கம்மா காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போது, உங்க பின்னாடியே சாப்பாட்டை தூக்கிகிட்டு அலைவாங்க. நீங்க அதனை உதாசீனப்படுத்துவீங்க. ஆனால் அதன் முக்கியத்துவத்தினை எப்பவாவது உணருவீங்க. காலை உணவு என்பது உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. பல மணி நேரம் உணவு இல்லாமல் இருந்த மூளையினை அதே பட்டினியோடு அன்றைய வேலையை உங்களால் பார்க்க இயலாது. 

செயல்பாட்டுத் திறன் குறையும். இவ்வாறு தொடர்ந்தால் நிரந்தர பாதிப்புகள் ஏற்படும். ஜப்பானிய ஆய்வு கூறுவது தொடர்ந்து காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு 36 சதவீதம் கூடுதலாக பக்கவாதம் ஏற்படுகின்றது என்பதுதான். மூளைக்கு ‘க்ளூகோஸ்’ பற்றாத பொழுது எதனையும் புரிந்து கொள்ளும் தன்மை வெகுவாகக் குறைகின்றது. முறையான காலை உணவு உட்கொள்பவர்களுக்கு அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடும் எண்ணம் தோன்றாது. 

செல்போன்: இதிலுள்ள கதிர்வீச்சு போனை தூங்கும் பொழுது அருகிலேயே வைத்துத் தூங்குபவர்களை பாதிக்கின்றதாம். தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படுகின்றது. இதனைப் பற்றிய மேலும் அபாயகரமான பாதிப்புகளையும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முதலில் 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் செல்போன் உபயோகத்தை தவிர்ப்பதை அனைவரும் குறிப்பாக மாணவ சமுதாயம் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். 

நோய் வாய்பட்டிருக்கும் பொழுதும் வேலை செய்தல்: பலருக்கு தான் செய்யும் வேலையால் தான் அந்த ஆபீசே நடக்கின்றது என்ற எண்ணம் இருக்கும். தான் ஒரு அரைநாள் லீவு எடுத்தால் கூட கடும் பிரச்சினை என்பர். இவர்களுக்கு ஜுரமோ, மற்ற எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் விடாமல் அலுவலகம் செல்வர். இல்லையெனில் போனிலோ, கம்ப்யூட்டரிலோ வேலை செய்தபடி இருப்பர். தேவையான ஓய்வு என்பது அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முழு வீச்சில் வேலை செய்யும் நேரத்தில் அதிகம் உடலை வருத்திக் கொள்வது மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் பாதித்து விடும். 

அதிகம் உண்பது: இன்றைக்கு பலருக்கும் இருக்கும் பிரச்சினை ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். இது ஒரு வகை மன பாதிப்புதான். அதிக கவலை, டென்ஷன், அதிக மகிழ்ச்சி இவற்றில் மனம் மூழ்கும் பொழுது அதிகம் உண்ணத் தொடங்கி விடுவர். இதனால் எடை கூடி பல நோய் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் என்பது மிகப் பெரிய உண்மை. ஆனால் இத்தகையோர் தேவையான சத்தான உணவுகளை உண்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளையே உண்கின்றனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் உடல் பசியுடனேயே இருக்கும். இதனால் மூளை அதிக சோர்வுற்று செயல்திறன் அதிகம் குறைந்து விடும். 

வாய் திறந்து பேசுதல்: சிலர் அதிகம் பேசவே மாட்டார்கள். மிகக் குறைவாகவே பேசுவார்கள். சைகை செய்வார்கள். எழுதுவதைவிட பேசும் பொழுது மூளையின் பல பகுதிகள் உபயோகப்படுத்தப்படுகின்றது. சாதாரண மனிதனுக்கு மற்றவர்களுடன் ஓரளவு பேசுவது அவசியமாகின்றது. பலர் பேசாமல் இருப்பதாலேயே முகம் ‘உர்’ என்றும், ‘கடு கடுப்பாக’ இருப்பது போலவும் இருக்கும். இவ்வாறு இருப்பவர்களுக்கு டென்ஷன், மனஅழுத்தம் கூடுதலாக ஏற்படுகின்றதாம். 

முறையான தூக்கம்: இன்றைய சமுதாயத்தில் இரவு முழுவதும் அதிக நேரம் கண விழிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதுவும் இரவு டி.வி. பார்க்க, செல்போனில் பேச என தூக்கத்தினை குறைத்து உடலைக் கெடுத்துக் கொண்டு வாழ்கின்றனர். பலர் மனஉளைச்சலால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் தூக்கமின்மை என்ற பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். யாராக இருந்தாலும் 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு அவசியம். அதுவும் ஒரே போல் தூங்கி நேரப்படி எழுவதும் அவசியம். இல்லையெனில் குழப்பம், கோபம், அதிக மறதி, சோர்வு என ஒருவரை தூக்கமின்மை நிரந்தர நோயாளி ஆக்கி விடும். 

புகை பிடித்தல்: இதனின் தீமை ஏராளம். ஆய்வின்படி மூளையின் நரம்புகள், செல்கள், செயல்திறன் என அனைத்தையும் பாதிக்கும் நச்சுத் தன்மை கொண்டது. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக புகை பிடிப்பதனை நிறுத்தி விடுங்கள். 

சர்க்கரை: அதிக சர்க்கரை உடலுக்குத் தீங்கு. குறிப்பாக நரம்பு மண்டலத்திற்கு அதிக தீங்கு. ஆய்வுகளின்படி அதிக சர்க்கரை எடுத்துக் கொள்பவர்களுக்கு ‘மறதி நோய் ஏற்படுகின்றது. 

உங்களுக்காக மட்டும் நீங்கள் செய்து கொள்ள வேண்டியவை: நம்மை நாமே நேசிக்க கற்றுக் கொண்டால் பல உடல், மன நோய்கள் தாக்குதல்களிலிருந்து நாம் விடுபடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. நம் உடலையும், மனதையும் நாம் அலட்சியப்படுத்துவதன் காரணமே முறையாக உண்பதில்லை, முறையான பயிற்சிகளை நாம் மேற் கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இன்றைய சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் தனித்து இருப்பவர்கள் அநேகர் உள்ளனர். அவர்கள் தனிமை அவர்களுக்கு ஒரு பயத்தினை கொடுத்து விடுகின்றது. தனிமையும் ஒரு வாழ்க்கை அழகுதான் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட வேண்டும். அவர்களுக்கும், அனைவருக்குமான சில குறிப்புகளைப் பார்ப்போம். 

* நாம் மட்டும்தானே என உணவு முதல், உடை முதல், பொழுது போக்கு வரை அனைத்தையும் தாறு மாறாய் குறுக்கிக் கொள்ளாதீர்கள். ஒரு நல்ல சமையல் செய்து கொள்ளுங்கள். நல்ல ஆடை அணியுங்கள். இதற்கெல்லாம் அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே சிறு சிறு மாற்றங்கள், முயற்சிகள் மூலம் மகிழ்ச்சியாய் இருக்கலாமே. 

* பிறருக்கு உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். பணத்தினால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆள் பலம் யானை பலம். விலங்குகள், பறவைகள் இவற்றிற்கு உணவு அளியுங்கள். மனம் எளிதாகும். 

* நடவுங்கள், நீச்சல் தெரிந்தால் நீச்சல் செய்யுங்கள். சைக்கிளில் வெளியே செல்லுங்கள். 

* சிறிது தேங்காய் எண்ணை எடுத்து உங்கள் உடலுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்ளுங்கள். 

* புதிதாக ஏதாவது பொழுது போக்கு முறையினை உங்களுக்கு நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். 

* வெளியே செல்லுங்கள். சிறு பொருள் வாங்க வேண்டி இருந்தாலும் நீங்களே கடைக்குச் செல்லுங்கள். முடிந்தால் வெளியூர் சென்று வாருங்கள். பிரயாணம் நல்ல மன அனுபவத்தினைக் கொடுக்கும். 

* பாடத் தெரிந்தால் பாடுங்கள். சிறிது நேரம் இசை போட்டு நடனம் ஆடுங்கள். 

* புத்தகங்களை உங்களது நண்பருக்கு விடுங்கள்.

* கதை, கட்டுரைகள் எழுத முயற்சியுங்கள். பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

* சற்று சோம்பலாக பொழுதினை கடத்த நினைத்தீர்கள் என்றால் அவ்வாறே செய்யுங்கள். தப்பு இல்லை. 

இவை அனைத்தும் உங்கள் மனதினையும், உடலினையும் நன்கு பாதுகாக்கும்.