மெக்சிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோ நாடு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு அங்கு 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2016-ம் ஆண்டும் 11 பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை.
 
இந்த நிலையில் அங்கு சியாபஸ் மாகாணத்தின் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.

மரியோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலைக்கு அங்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.