மெக்சிகோவில் விமான விபத்தை காணொளி எடுத்த பயணி!

Thursday August 02, 2018

மெக்சிகோவில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதை, பயணி ஒருவர் தனது செல்போனில் எடுத்த காணொளி  வெளியாகி உள்ளது.

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 99 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 103 பேருடன் ஏரோமெக்சிகோ விமானம் செவ்வாய்க்கிழமை மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. 

மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையின் அருகில் உள்ள புல்வெளியில் அவசரமாக தரையிறக்க முற்பட்டபோது விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக விமானத்தின் அவசரகால படிக்கட்டு வழியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில், விமானம் தரையில் விழப்போகிறது என்பது தெரிந்தும், அதில் இருந்த ரமின் பர்சா (வயது 32) என்ற பயணி தனது செல்போனில் தைரியமாக விபத்தை வீடியோ எடுத்துள்ளார். அந்த காணொளி பதிவு தெளிவாக இல்லாவிட்டாலும், அதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கதறி அழுவது கேட்கிறது. விமானத்தினுள் புகை மண்டலம் சூழ்ந்ததையடுத்து, பயணிகள் கதறியபடி வெளியேற முயற்சிப்பதும் காணொளியில் பதிவாகி உள்ளது.

இந்த விபத்தில், 49 பேர் காயமடைந்தனர். விமானி மற்றும் சில பயணிகளுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால்  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமான உயிரிழப்பு ஏற்படவில்லை.