மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க முடியாது!

Wednesday August 08, 2018

சென்னை மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க இடம் வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், பரபரப்பான சூழல் உருவானது.

இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெவித்துள்ளனர். அண்ணா சமாதி உள்ள பகுதி கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குள் வரவில்லை என ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த துரைசாமி கூறினார்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக முறையிட்டது. இரவு 10.30 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அரசுத் தரப்பில் ஆஜராகினர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆஜராகினர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையை அடுத்து, திமுகவின் மனு இன்று காலை 8 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தங்களது பதிலை காலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவிப்பு கொள்கை முடிவு என்பதால் அதனை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.