'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது!

Saturday April 21, 2018

மௌனத்தையே மொழியாகக் கொண்ட ஐந்து பேரும், ஓசையையே மொழியாகக் கொண்ட ஒருவரும் ஆபத்தான நிலையில் சந்தித்தால் அதுவே 'மெர்க்குரி'.

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்களும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பாதரசக் கழிவால் பாதிக்கப்பட்ட இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். சைகையால் மட்டும் தங்கள் உணர்வுகளை, அன்பை பரிமாறிக் கொள்வார்கள். இந்துஜாவின் பிறந்தநாளில் தன் காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பி காரில் அழைத்துச் செல்கிறார் சனந்த். அவர்களுடன் மூன்று நண்பர்களும் சேர்ந்துகொள்ள காரில் இரவில் பயணிக்கிறார்கள். பாதரசக் கழிவுக்குப் பலியான 82 பேரின் நினைவிடத்தில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். அதை இந்துஜாவும் மகிழ்வுடன் ஏற்கிறார். மகிழ்ச்சியான அந்தத் தருணத்துடன் காரில் பயணிக்கும்போது சனந்த் செய்யும் சில சேட்டைகளால் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது. அந்த அசம்பாவிதம் என்ன, இதனால் அந்த ஐவரும் சந்திக்கும் விளைவுகள் என்ன, பிரபுதேவா யார், எந்த சூழலில் இவர்களைச் சந்திக்கிறார் என்ற கேள்விகளுக்கு சத்தமாகப் பதில் சொல்கிறது 'மெர்க்குரி'.

தமிழ் சினிமாவின் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு வெளிவந்திருக்கும் படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படம் என 'மெர்க்குரி' தனித்த கவனம் பெற்றுள்ளது.

கனத்த மௌனம், ஆவேச அலறல் என்ற இரண்டையும் திரை மொழியில் தனக்கே உரிய ஆளுமையுடன் அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். பாதரசக் கழிவின் ஆபத்தை அழுத்தமாகச் சொல்லும் அதே சமயத்தில் இது கார்ப்பரேட் பூமி என்றும் நுட்பமாக உணர்த்துகிறார். வசனமில்லாத படம் என்பதால் அந்தக் குறையை ரசிகர்களுக்கு குறையாகத் தெரியாத வண்ணம், கதாபாத்திரங்களிடம் கச்சிதமான நடிப்பைப் பெற்று ஆச்சர்யப்படுதி இருக்கிறார். தொழில்நுட்ப அம்சங்களால் தன்னை பலம் சார்ந்த இயக்குநராக மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

சனந்த், இந்துஜா மீதான காதலிலும், நண்பர்கள் மீதான அன்பிலும் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்துஜா தேர்ந்த நடிப்பால் வசீகரிக்கிறார். பிரபுதேவா ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தும்போதும், கோபாவேச நடிப்பிலும் மிரள வைக்கிறார். கஜராஜ், தீபக், சஷாங்க், அனிஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

காடு, உயர்ந்த மலைப்பகுதி, மலையையும் வானத்தையும் ஒன்றிணைக்கும் அந்த ஒற்றை ஷாட், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த மெர்க்குரி தொழிற்சாலை, அங்கே சனந்த் தன் நண்பனை மீட்கப் போராடும் காட்சி, காதலர்கள் நிழலை மேகத்துடன் இணைக்கும் காட்சி ஆகியவற்றில் திருவின் கேமரா சாகசம் செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும், குணால் ராஜனின் ஒலிக்கலவையும் படத்தை வலுவாகத் தாங்கிப் பிடிக்கின்றன. பீத்தோவனின் இசையை சந்தோஷ் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை என பிரச்சினை சூழ் தமிழகத்தில் இருக்கும்போது பாதரசக் கழிவால் பாதிக்கப்படுவர்களின் நிலையையும், கார்ப்பரேட் பூமியின் யதார்த்தத்தையும் கார்த்திக் சுப்பாராஜ் குறியீடாகவே பதிவு செய்கிறார். 'மன்னித்துவிடு, இதுவரையில் நாம் தவறான எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறோம்' என்ற மிகப் பெரும் கருத்தை போகிற போக்கில் எழுத்துகளால் சொல்வது உறுத்தல். இந்துஜா நடந்ததை சைகை மொழியில் சொன்ன பிறகும் அன்பின் வழியைத் தீர்மானிப்பது ஆறுதல். மொத்தத்தில் 'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது.