மைத்திரியின் தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம்!

Saturday October 27, 2018

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன தீர்மானித்தமைக்கு மூன்று சம்பவங்கள் காரணம் என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றும் மறுப்பொன்றும் செய்தியாளர் மாநாடொன்றுமே சிறிசேன இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேசிய அரசாங்கத்தின் முடிவு ஒருவார காலத்திற்கு முன்னரே நிச்சயமாகி விட்டது என சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் புதுடில்லியிலிருந்து ரணில்விக்கிரமசிங்க வெளியிட்ட கடுமையான அறிக்கையே இறுதி தருணங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை ஜனாதிபதியை இலக்காக கொண்டிருந்தது,இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாவதற்கு ஜனாதிபதியே காரணம் என நேரடியாக குற்றம்சாட்டியது என கொழும்பை தளமாக கொண்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர்  ஜனாதிபதி அலுவலகத்துடன் கலந்தாலேசனை மேற்கொள்ளவில்லை.

அந்த அறிக்கை புதுடில்லியை கூட ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதன் பின்னர் வியாழக்கிழமை இலங்கையின் அரசமைப்பு பேரவை உச்சநீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றத்திற்கான சிறிசேனவின் இரு நியமனங்களை நிராகரித்திருந்தது.

 கொலை சதி

வெள்ளிக்கிழமை இலங்கை பொலிஸார் ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்து விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.

குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவி;த்த பொலிஸ் பேச்சாளர் நாமல் குமார என்ற நபரி;ன் தொலைபேசி உரையாடலில் கொலை சதி குறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.

பொலிஸாரின் இந்த கருத்து  இலங்கை ஜனாதிபதியின் உயிருக்கு எந்த வித ஆபத்துமில்லை என்பது போல காணப்பட்டது.

இந்த சம்பவங்கள் அனைத்தினதும் ஒட்டுமொத்த விளைவாகவே சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கினார் என கொழும்பின் முக்கிய அரசியல் வட்டாரத்தை சேர்ந்த  ஒருவர் தெரிவித்தார் என இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது