மைத்திரி என்ன பெரிய மனிதனா?

Sunday April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான். ‘பயங்கரவாதிகளை அழிக்கவேண்டும்’ என்று வெறியேற்றி தமிழர் தாயகத்திற்கு அனுப்பப்பட்ட அந்தச் சிப்பாய்க்கு, களமுனையில் ஆக்கிரோசத்துடன் போரிட்ட விடுதலைப் புலிகளைப் பார்த்தபோது அது உண்மையாகத்தான் இருக்கும் என்றே நம்பியிருந்தான். அதனால்தான், கடும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த களத்தில் வைத்து தன்னை அவர்கள் உயிருடன் பிடித்தபோது இனி உயிருடன் தனது தாய் மண்ணிற்கு திரும்பமுடியாது, தனது இறுதிக்கணம் அதுவென்று அவனை எண்ண வைத்திருந்தது. கர்ப்பிணியாக விட்டுவிட்டு வந்த தன் மனைவியை ஒருமுறை எண்ணிப்பார்த்தான். தன் குழந்தையை அதுவும் முதல் குழந்தையைக் காணாமலேயே தன் வாழ்வு முடிந்துவிடப்போகின்றது என்ற கவலை அவனை ஆட்கொண்டிருந்தது.

நாட்கள் நகர்ந்தன... சமாதான மாயைக்குள் இலங்கை சிக்கியிருந்தது. தங்களிடம் போர்க் கைதிகளாக இருந்த சிப்பாய்களை பார்வையிடுவதற்கு பெற்றோர், உறவுகளுக்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்கியிருந்தனர். சிப்பாய்களைப் பார்க்க வந்தவர்களில், அந்தச் சிப்பாயின் மனைவியும் மகளும் அடங்கியிருந்தனர். முதன் முதலாக மனைவியுடன் தன் மகளைப் பார்த்த அந்தச் சிப்பாய் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனான். அவளைத் தன் மடியில் வைத்து கொஞ்சிக் குலாவுதற்கு அந்தச் சிப்பாய்க்கு சில மணி நேரங்களே கிடைத்திருந்தது. முதன் முதலாகத் தன் தந்தையைப் பார்த்த அந்தச் சிறுமியும் அவன் மனைவியும், பிரியமனமின்றிப் பிரிந்து மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

அவர்கள் சென்ற சில நாட்களின் பின் தென்னிலங்கையில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவருக்கு அந்தக் கடிதம் வந்திருந்தது. அந்தச் சிப்பாயின் மகளான சிறுமிதான் அக்கடிதத்தை எழுதியிருந்தாள்.  ‘தான் பிறந்ததில் இருந்து தன் தந்தையுடன் வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பை எனக்கு வழங்குவீர்களா மாமா?’ என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாராம்சம். கடிதத்தை தமிழீழத் தேசியத் தலைவரிடம் கொடுத்தபோது வாங்கிப் படித்தவர், உடனடியாகவே பொறுப்பாளருக்கு கட்டளையிடுகின்றார். ‘அந்தச் சிறுமி அடுத்தமுறை தந்தையைப் பார்க்க வரும்போது, அவள் கையில் தந்தையின் கையைப் பிடித்துக்கொடுத்து, கூட்டிக்கொண்டுபோகுப்படி அனுப்பிவையுங்கள்’ என்று. தலைவரின் கட்டளையை யாரால் மீறமுடியும்? தலைவர் கூறியதுபோன்று அச்சிறுமி மீண்டும் தந்தையைப் பார்க்க வந்தபோது, செஞ்சிலுவைச் சங்கம் சாட்சியாக நிற்க சிப்பாயை சிறுமியின் கையில் பிடித்துக்கொடுத்து கூட்டிக்கொண்டுபோகுமாறு அந்தப் பொறுப்பாளர் கூறியபோது, அந்தச் சிப்பாயால் மட்டுமல்ல அந்தச் சிறுமியாலும் அவன் மனைவியாலும் கூட அந்த நிமிடத்தை நம்பமுடியாமல் இருந்தது.

பயங்கரவாதிகளாக தன்னிடம் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் எத்தனை மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை அந்தச் சிப்பாய் விடுதலைப் புலிகளிடம் சிறையிருந்த நாட்களில் பலமுறை நேரில் கண்டிருக்கின்றார். இப்போது தன் மகளின் ஒற்றைக் கடிதத்திற்கு மதிப்பளித்து தன்னை உடனடியாக விடுவித்து, அதுவும் தன்னைப் பார்க்க வந்த தன் மகளுடன் அனுப்பிவைத்த தமிழீழத் தேசியத் தலைவருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் அந்தச் சிப்பாய் தடுமாறியது வரலாறு.

*********************

2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் மனைவி அண்மையில் சுகயீனம் காரணமாக சாவடைந்தபோது, இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் சிறீலங்கா அரசு அந்தக் கணவனுக்கு அனுமதி வழங்கியது. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவருடன் அவரது மகள் சங்கீதா முதற்தடவையாக மடியில் அமர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். தாய் தங்களைவிட்டுப்போனபோதும் தன் தந்தை வந்துவிட்ட மகிழ்ச்சி அவளை ஆட்கொண்டிருந்தது. ஆனால் மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் தன் தந்தையை ஏற்றியபோதுதான், தன் தந்தையும் தன்னை விட்டுவிட்டுப் போகப்போவது அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குப் புரிந்தது. தந்தையுடன் ஓடிப்போய் சிறைச்சாலை வாகனத்தில் அவள் ஏறியபோது அங்கிருந்த அனைவரின் மனதும் கலங்கிவிட்டது. சிலர் கண்ணீர்விட்டுக்கூட அழுதுவிட்டனர்.  

பிறந்ததில் இருந்து தந்தையின் மடியில் தவழும் பாக்கியத்தைப் பெறாதவள் இந்தச் சிறுமி. இப்போது தாயையும் இழந்து தனது சகோதரனுடன் அநாதரவாக நிற்கின்றாள். தாய் இருந்தபோதே தங்கள் தந்தையை விடுவிப்பதற்கு எத்தனையோ வழிகளின் ஊடாகப் போராடியும், எத்தனையோ கடிதங்கள் சிங்கள ஆளும் அரசியல் தலைவர்களுக்கு எழுதியும் அவளது தந்தையின் விடுதலை தாய் உயிருடன் இருக்கும் வரை கிடைக்காமலேயே போய்விட்டது.

இப்போது தங்கள் நிலையை விளக்கி அவள் கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றாள். இம்முறை அரசியல் தலைவர்கள் யாருக்கும் எழுதவில்லை. மாறாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவின் மகள் சதுரிகாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாள். ‘அம்மாவையும் இழந்து, அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார். இன்று எனக்கு பத்து வயது. இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே. அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா  உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து  உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.

அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன். ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை. அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள்.’ என்பதுதான் இந்தச் சிறுமி எழுதிய கடிதம்.

இதுவரைக்கும் இந்தக் கடிதத்திற்கு மைத்திரியிடம் இருந்தோ, ஏன் கடிதம் அனுப்பப்பட்ட சதுரிகாவிடம் இருந்தோ எந்தவொரு பதிலும் இல்லை. இப்போது அநாதரவாக நிற்கும் அந்தப் பிள்ளைகளுக்காக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி இலங்கைத் தீவெங்கும் கையயழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். போதாக்குறைக்கு தேனிசைச் செல்லப்பாவும் இந்த விடுதலைக்காகப் பாடலைப் பாடிவிட்டார். ஆனால், ஒற்றை உத்தரவில் விடுவிக்கும் நிறைவேற்று உச்ச அதிகாரம் கைகளில் இருந்தும், தந்தையும் இல்லாமல் தாயும் இல்லாமல் வாழும் அந்தச் சிறுசுகளுக்கு வாழ்வளிக்க மைத்திரிக்கு இன்னமும் மனசு வரவில்லை.

‘பயங்கரவாதி’ என்று இந்த உலகம் குற்றம்சாட்டும் தமிழீழத் தேசியத் தலைவரின் நல்மனதிற்கும், ‘நல்லாட்சி அரசு’ என்று இந்த உலகம் மகுடம் சூட்டும் மைத்திரிபால சிறீசேனவின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை இந்த உலகம் இப்போதாவது புரிந்துகொள்ளுமா என்ன?

‘கடந்த காலத் தவறுகளை மன்னித்து மறக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் ‘நிலைமைகள் அவ்வப்போது மாறும்’ எனவும் சிறீலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாணத்திற்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த பனன்வல கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனால், மறந்தும் தமிழ் அரசியல் கைதிகளை மன்னிப்பதற்கு சிங்களப் பேரினவாத அரசு தயாராக இல்லை.

‘மன்னிப்புக் கேட்பவன் மனிதன். மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்’ என்பது திரைப்படம் ஒன்றில் வந்த வரிகள். இத்தனை மக்களின் போராட்டங்களுக்குப் பிறகு மைத்திரி அந்தத் தந்தையை மன்னித்து விடுவிப்பது மனமிரங்கியல்ல. அழுத்தங்களாலும், அவமானங்களாலும் மட்டும்தான்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு