மைய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

திங்கள் அக்டோபர் 19, 2015

தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுத்தப்பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வால் கடந்த சில வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட பயன்பாட்டுக்குரிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும், நியாயமான விலையிலும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும். மாநில அரசுக்கு மட்டுமின்றி மையஅரசுக்கும் இதிலே பெரும் பொறுப்புண்டு. ஆனால், அவ்வாறு பொறுப்பையுணர்ந்து மைய, மாநில அரசுகள் செயற்படுவதாகத் தெரியவில்லை.

 

விலைவாசிக் கட்டுப்படுத்துவது முக்கியக் கடமை எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மக்களுக்கானத் தேவை அதிகரிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து அதற்கேற்ப போதிய இறக்குமதி நடவடிக்கைகளை எடுக்கவில்லை. விலைவாசி ஒருப்பக்கம் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் விவசாயிகளின் வாழ்வுநிலை சீரழிந்து வருகிறது. பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், விவசாய விலைபொருட்களுக்கு நியாயமான விலைகிடைக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். மாநிலத்திலும் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை.

 

அவற்றை நம்பியிருக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மைய மாநில அரசுகள் மிகவும் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவே, தற்போதைய விலைவாசி உயர்வுக்குக் காரணமாகும். ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்மஸ்து, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. தற்போது விலைகள் மென்மேலும் உயரும் என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

 

 

 விலைவாசி உயர்வுக்கு, போதிய உற்பத்தி மற்றும் இறக்குமதி இல்லையென்பதை காரணமாகவுள்ளன. அத்துடன், இணையதளத்தின் வழியாக நடக்கும் வணிகமுறையும் விலைஉயர்வுக்குக் காரணம் என தெரியவருகிறது. இணையவழி வணிகம் செய்யவும் நிறுவனங்கள், திட்டமிட்டே பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனைக் கண்காணித்து, பதுக்குவோரின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! தற்போதைய நெருக்கடிகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றிட இணையவழி வணிகத்தைக் கட்டுப்படுத்துவது உடனடித் தேவையாகும். மைய, மாநில அரசுகள் பண்டிகைக் காலத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகிறது.