மொழிகள் காக்கப்பட்டால்தான் இறையாண்மை பாதுகாக்கப்படும் - வைரமுத்து

April 20, 2017

தேசிய இனங்களின் அனைத்து மொழிகளும் காப்பாற்றப்பட்டால்தான் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
பள்ளி, கல்லூரிகளில் பல ஆயிரம் இளைஞர்களை சந்திக்கும்போதெல்லாம் தமிழ் இலக்கிய பரிச்சயம் உண்டா, தொன்மையான தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தெரிந்துவைத்திருக்கிறார்களா, இலக்கிய ஞானம் இருக்கிறதா என்று பரிசோதித்து பார்த்திருக்கிறேன்.

ஆனால், நிகழ்கால திரைப்படங்களையும், கைப்பேசி தகவல்களையும், நவீன உலகத்துக்கு தங்களைத் தயார்படுத்துவதற்கும் இளைஞர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்களே தவிர, தமிழ் இலக்கியம் இந்த மண்ணுக்கும், இனத்துக்கும் கொடுத்த கொடைகளை அறியாமல் இருக்கிறார்கள் என்பது என்னை வேதனைக்குள்ளாக்கியது.
அடுத்த தலைமுறையினர் ஆழ்ந்த வாசிப்புக்கு ஆளாவார்களா, பெரும் புத்தகத்தைப் படிப்பார்களா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. பாரதிதாசன் பற்றி எழுதிய கட்டுரைக்கு தமிழ் உலகம் கொடுத்த உற்சாக வரவேற்பு எனக்கு ஊக்கமும், உத்வேகத்தையும் அளித்தது.

அதைத் தொடர்ந்து எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்னதாசன், புதுமைப்பித்தன், மகாகவி பாரதியார், அப்பர், கம்பர், திருவள்ளுவர் குறித்த கட்டுரைகள். இப்போது வள்ளலார் குறித்த பதிவு. இத்துடன் நின்றுவிடக்கூடாது என்று நின்றுவிடாமல் இளங்கோ அடிகள், தொல்காப்பியர், திருமூலர், ஆண்டாள், நிகழ்கால இலக்கிய உலகம் என்று எனது படைப்புகளை உருவாக்க என்னை அர்ப்பணித்துவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையும் பத்து நூல்களைப் படித்ததற்கு சமம் என தமிழ் இளைஞன் ஒப்புக்கொள்வான் என நினைக்கிறேன்.

வள்ளுவரையும், வள்ளலாரையும் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் ஒழுங்கற்று கிடக்கும் சமுதாயம் சீரடையும். ஜாதி, மதங்களைக் கடந்ததுதான் வள்ளலாரின் குரல். அது சத்தியக் குரல். சத்தியவாக்கின் குரல். இந்தக் குரலின் தேவை இப்போதும் இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் செயற்கைக்கோள்களை அனுப்பி கண்காணிக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால், நரபலியால் நன்மை கிடைக்கும் என நம்பும் கூட்டம் இன்னும் இருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். ஆனால், வாடிய பயிர்களைக் கூட காண முடியாமல் புது தில்லியில் ஆடைகள் இன்றி வாடிக் கிடக்கும் விவசாயிகளைப் பார்க்கும்போது வள்ளலாரின் தேவையை எப்படி குறைத்து மதிப்பிட முடியும்? ஹிந்தியை சிபிஎஸ், பள்ளியில் கட்டாயம் என மத்திய அரசு புகுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. எந்த மொழியைத் திணித்தாலும், தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தமிழ் படிக்க வைத்துவிட்டுதான் வேறு மொழியைப் படிக்க வைப்போம் என்ற வைராக்கியம் கொண்டால் தமிழையும், தமிழ் இனத்தையும் அழிக்க முடியாது.

உலகமயமாக்குதலால் உள்ளூர் கலாசாரத்தில் கூடக் கலப்பு ஏற்படுகிறது. உள்ளூர் கலாசார கலப்பால் தாய்மொழி அழிக்கப்படுகிறது. இந்தக் கலாசார கலப்பு தமிழுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்தவொரு மொழிக்கும் ஏற்படக்கூடாது. எல்லா தேசிய இனங்களின் மொழிகள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்படும். கலாசாரத்தின் அடையாளம்தான் மொழி. மொழி என்பது பேச்சா, ஒலியா, இலக்கியத்தின் பெட்டகமா? மொழி என்பது நாகரித்தின் தொகுப்பு. பாரம்பரியத்தின் தொடர்ச்சி, பண்பாடுகளின் நீட்சி. நாம் இருப்போமோ இல்லையோ, கம்பர், திருத்தக்கத் தேவர், இளங்கோ அடிகள், பாரதி, பாரதிதாசன் தொடங்கிய இலக்கிய
ஆளுமைகள் இருப்பார்கள். ஆனால், அப்போது தமிழும் இருக்க வேண்டும். தமிழரும் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் படைப்புகள் நிலைக்கும் என்றார்.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட