மோடியின் சொற்பொழிவு ஏழை மக்களின் பசியை போக்காது - சோனியா காந்தி

Tuesday May 08, 2018

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கர்நாடகாவின் பீஜாப்பூர் மாவட்டத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்தார். கர்நாடகாவில் வருகிற 12-ம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சாற்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடி, அமித் ஷா உட்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் கர்நாடகாவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கர்நாடகாவின் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஜய்புரா பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

காங்கிரஸ் கர்நாடகாவின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறது. ஏழை எளிய மக்களுக்காக உழைத்து வருகிறது. நாங்கள் தொடங்கிய திட்டங்களை பாஜக நிராகரித்தது. வறட்சியினால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது முதல்வர் சித்தராமையா பிரதமரை சந்திக்க முயன்றார். ஆனால் பிரதமர் அவரை சந்திக்க மறுத்தார். தேர்தல் பிரசாரங்களின் போது மோடி தவறான கருத்துகளை பதிவு செய்கிறார். தனது அரசியலில் நாட்டின் தலைவர்கள் பெயரை பயன்படுத்துகிறார். 

நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி ஊழலை ஒழிப்பேன் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. மோடியின் அரசு கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசிடமிருந்து வேறுபட்டது. மோடி ஒரு நல்ல சொற்பொழிவாளர். ஆனால் நடிகர் போல பேசும் அவரின் சொற்பொழிவு சாதாரண மக்களின் வயிற்றை நிரப்பாது. 

காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் நம்பர் 1-ஆக மாற்றி மக்களுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வரும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.