மோடியும், அம்பானியும் இணைந்து துல்லிய தாக்குதல்!

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். 

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
 
இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.

இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.

எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான விஷயம்.

ஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.

மோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.

அவர், “பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.