மோடி அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது : மலேசியாவில் வைகோ

செவ்வாய் நவம்பர் 24, 2015

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தம்ழர்களுக்கு துரோகம் செய்வதாக ம.தி.மு.க தலைவர் வைகோ மலேசியாவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மலேசியாவிலுள்ள பினாங்கில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட வைகோ இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு சிறப்புரையாற்றிய வைகோ தொடர்ந்து தெரிவிக்கையில்-

‘இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமை அமைப்பு கடந்த 2012ஆல் பாராட்டித் தீர்மானம் போட்டது. 2015ஆம் ஆண்டும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இலங்கையின் இறையாண்மையைக் காக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கிறது.

தமிழர்களின் இறையாண்மையைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஐரோப்பியர்கள் வருகைக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் இறையாண்மையை இழந்தார்கள். இழந்த இறையாண்மையை மீட்கவே தமிழர்கள் போராடுகிறார்கள்.

நல்லிணக்கம் என்ற வார்த்தையே தவறானது. கொலைகாரனும், கொலை செய்யபட்டவன் குடும்பமும் எப்படி நல்லிணக்கமாக இருக்க முடியும்? ஐ.நா. சாசனத்தில் அனைத்து இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. அது ஈழத் தமிழர்களுக்கும் உண்டு. அதைப் பறிக்கவோ, தடுக்கவோ யாராலும் முடியாது.

ஈழத் தமிழர் நலனை பொறுத்தமட்டில், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது பன்னாட்டு பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், ஏழரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதியாக இருந்து தீர்மானம் போட்டது ஜெயலலிதாதான். ஆகையால் அவரை மோடி அரசுடன் சேர்க்கக் கூடாது’ என குறிப்பிட்டதோடு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வைகோ பேசியமை குறிப்பிடத்தக்கது.