யாழில் ஊடகவியலாளருக்கு கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல்!

புதன் ஜூன் 13, 2018

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் முன்னணி இணைய ஊடகவியலாளர் ஒருவரிற்கு நடுவீதியில் வைத்து கைத்துப்பாக்கி காட்டி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

தனது மகனை பாடசாலைக்கென அழைத்துச்சென்றிருந்த குறித்த முன்னணி இணைய ஊடகவியலாளரை பருத்தித்துறை –யாழ்ப்பாணம் வீதியில் சட்டநாதர் வீதி சந்தியில் கைத்துப்பாக்கியுடன் வழிமறித்த இருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்களுள் ஒருவர் வல்வெட்டித்துறை இராணுவ முகாமை சேர்ந்த புலனாய்வாளர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.மற்றொரு நபர் உடுப்பிட்டியைச் சேர்ந்த 26 வயதான ஜீவசங்கரி என்பவரே அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த பத்து நாட்களாக தன்னை யாரோ கடத்தி வைத்திருந்து தாக்கியதாகத் தெரிவித்து அண்மையில் இந்நபர் இலங்கை படையினரால் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

குறித்த நபர் தொடர்பாக வெளியான புலனாய்வு செய்திகளின் பிரகாரம் புலம்பெயர் நாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்காக நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார். தனது மகனான ஜீவசங்கரியை காணவில்லை என தந்தை மூலம் முறைப்பாட்டை பொலிசாரிடம் பதிவு செய்துள்ளார் பின்னராக பத்து நாட்களின் பின்னர் வல்லை வெளியில் நாடகப் பாணியில் கைகால்களைக் கட்டுவித்து படுத்திருந்து படையினரின் உதவியுடன் தான் மீட்கப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

குறித்த நபரை வைத்தியசாலையில் பரிசோதித்த போது, தன்னை குறித்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவரே கடத்தி தனக்கு பத்து நாட்களும் மயக்க மருந்து கொடுத்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் தன்னை தாக்கி வல்லை வெளியில் போட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இவனை வாக்குமூலத்தில் நம்பிக்கையிழந்த வைத்தியர்கள் இவரை யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைக்காக அனுமதித்திருந்தனர்.

இதனை குறித்த இணைய ஊடகவியலாளர் அம்பலப்படுத்தியதையடுத்தே இன்று இராணுவ புலனாய்வாளர்கள் சகிதம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த நபரது சசோதரனொருவரும் இராணுவபுலனாய்வில் இணைந்து பணியாற்றியதாக தெரியவருகின்றது.