யாழ்.குடா நாட்டில் அதிகரித்த வெப்பம், என்ன சாப்பிட வேண்டும் -மருத்துவர் ஜமுனானந்தா.

April 21, 2017

நாட்டில் அதிகரித்துள்ள வெப்பத்தால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை போஷாக்கான உணவு மற்றும் போதியளவான நீரை உடலுக்கு எடுத்துக்கொள்வதால் தவிர்த்துக்கொள்ள முடியும் என யாழ்.போதா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாந்தா தெரிவித்துள்ளார். தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலையின் தாக்கங்கள் தொடர்பாக வினவியோபதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த வெப்பநிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

வெப்ப நிலையானது அதிகரிக்கும் போது பற்றீரியா பெருக்கமும், வைரஸ் பெருக்கமும் காணப்படும். அத்துடன் இக் காலப்பகுதியில் சுவாசம் தொடர்புபட்ட நோய்கள் அஸ்மா நோய்கள் மற்றும் தூசுகளால் கண்நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே முடியுமானளவு காலை 11மணியளவில் இருந்து பிற்பகல் 3மணிவரை வெயில் சுழலில் செல்வதை தவிர்ப்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

இக் காலப் பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் சிலவேளைகளில் வெப்பத்தால் இறக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக 75வயது தொடக்கம் 80வயதுக்குட்பட்ட வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. எனினும் வெப்பத்தால் இறக்கின்ற நிலமை இந்தியாவிலேயே காணப்படுகின்றது. இங்கே அவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதில்லை.

மேலும் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு நாளொன்றுக்கு சராசரியாக ஒருவர் 2லிற்றர் தொடக்கம் 3 லிற்றருக்கு அதிகமான நீரை அருந்த வேண்டும். இவற்றைவிட நீராகாரம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதனூடாகவும் குறிப்பாக பழவகைகள், கூள், கஞ்சி, மரக்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதனூடாக இவ் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும். என தெரிவித்தார்.

செய்திகள்