யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி!

Monday June 04, 2018

“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும்.

 யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி  அழித்த வரலாற்று நினைவிடத்தில் (Bebelplatz) சென்ற வெள்ளிக்கிழமை  சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வான   யாழ் பொது நூலக எரிப்பின்  37 வது ஆண்டு நினைவேந்தலாக   கவனயீர்ப்பு கண்காட்சி நடைபெற்றது. 

எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றனையோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் எனும் Heinrich Heine மேதையின் கருத்துக்கு அமைய எரிக்கப்பட்ட  நூல்களின் அடையாளமாக ஈழத்தமிழர்களின் இனவழிப்பு விடையங்களை உள்ளடங்கிய நூல்கள் கண்காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டு துண்டுப்பிரசுரம் விநியோகித்து பல்லின மக்களுக்கு  விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. 

உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள்.

வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.