யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்சின் முன்னாள் அமைச்சர்!

Saturday October 14, 2017

யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்சின் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சர்  ஆட்ரே அஸவுலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. 

இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள், மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

இந்த அமைப்பின் தலைவராக கடந்த 2009-ம் ஆண்டு பல்கேரியாவின் இரினா பொகொவா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது, இதில் யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வாக்களித்தனர். இத்தேர்தலில் பிரான்சின் முன்னாள் கலாச்சாரத் துறை மந்திரி ஆட்ரே அஸவுலேவும், அவரை எதிர்த்து கதாரின் ஹமத் பின் அப்துல்அஜிஸ் அல்-கவாரியும் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆட்ரேவுக்கு 30 வாக்குகளும், அப்துல்அஜிசுக்கு 28 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து ஆட்ரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.