யேர்மனியில் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி

வியாழன் மார்ச் 10, 2016

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு, 12 - 13.03 தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி (Tamileelam FA) Remscheider Challenger போட்டியில் பங்குபெறவுள்ளது. முதன் முறையாக யேர்மனியில் எமது தேசிய அணி விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

12.03 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அன்று நட்பு ரீதியான ஆட்டத்திலும், 13.03 ஞாயிற்றுக்கிழமை  மதியம் 12 மணிக்கு Remscheider Challenger கிண்ணத்துக்கான ஆட்டத்திலும் விளையாடவுள்ளது. 2012 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்ற தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி கடந்த வருடங்களில் CONIFA வினால் நடாத்தப்பட்ட 2 உலக கிண்ணப் போட்டிகளிலும், 1 Tynwald Hill போட்டியிலும் கலந்து கொண்டுள்ளது.

தமிழீழ தேசிய அணி 2012 ஆம் ஆண்டு குர்திஸ்தான் நாட்டிலும் மற்றும் 2014 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில் நடைபெற்ற உலக கிண்ண போட்டியிலும், 2013 ஆம் ஆண்டு ஐக்கிய இராட்சியத்தில் நடந்த Tynwald  Hill போட்டியிலும் ( Isle of Man) கலந்து கொண்டுள்ளது. எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை 13.03 அன்று நடைபெறும் போட்டியினூடாக எதிர்வரும் 2018 நடைபெற இருக்கும் உலக கிண்ணப்போட்டியில் பங்குபெறும் தகுதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டியில் யேர்மனி உட்பட கனடா, ஐக்கிய இராட்சியம், பிரான்சு, கனடா நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் வருகை தருகின்றனர். 

உலகளாவிய ரீதியில் எமது இனத்தையும், நாட்டையும் பிரதிநிதித்துவபடுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படியான போட்டிகள்  மூலம் எமது தமிழீழ விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களது திறமைகளுக்கு ஒரு மேடை அமைத்து கொடுக்கும் முகமாக தமிழ் மக்கள் அனைவரும் நடைபெறவிருக்கும் ஆட்டங்களுக்கு வருகை தந்து உங்களது ஆதரவை அளித்து தமிழீழ தேசிய அணியை ஊக்குவியுங்கள். 

நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்